போக்குவரத்து கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தொழிற்சங்க கூட்டமைப்பின் இணையவழி கூட்டம் ஜூலை19 ஆம் தேதி நடைபெற்றது . அக்கூட்டத்தில் போக்குவரத்துக்கழக நிர்வாகங்கள் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் சம்பளம் வழங்கும் போது தொழிலாளர்களது விடுப்பை கழித்து சம்பளம் வழங்குவது , விடுப்பில்லாவிட்டால் சம்பளத்தை பிடித்தம் செய்வது போன்ற தவறான நடவடிக்கைகளை மேற்கொண்டன.
ஜூலை 1 ஆம் தேதி முதல் பேருந்துகள் இயங்காத நிலையில் தொழில்நுட்ப மற்றும் அலுவலக பணியாளர்களை வேலைக்கு வரவைத்து பல்வேறு தேவையற்ற வேலைகளை வழங்குவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். எனவே போக்குவரத்துக்கழக நிர்வாகங்களின் தவறான நடவடிக்கைகளை சரிசெய்ய கோரியும் தொழிலாளர்களுடைய பிரச்சினைகளை தீர்க்கக்கோரியும் போக்குவரத்து செயலாளர் மற்றும் நிர்வாக இயக்குநர்களுக்கு கூட்டமைப்பின் சார்பில் முறையீடு செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கழக தலைமையகங்கள் மற்றும் மண்டல தலைமையகங்களில் நிர்வாக இயக்குனர்கள் மற்றும் பொது மேலாளர்களை சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது. ஆனாலும் நாம் முன்வைத்த கோரிக்கைகளை விவாதித்து தீர்வுகாண எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
ஜூலை மாத ஊதியம் வழங்கும் போது இது போன்ற தவறான நடவடிக்கைகள் தொடரக்கூடாது என்றும், கழக மட்டங்களில் முன்வந்துள்ள பிரச்சினைகளையும் இணைத்து போக்குவரத்து செயலாளர் மற்றும் கழக அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் வருகிற ஜூலை 23ஆம் தேதிக்குள் நாம் முன்வைத்த கோரிக்கைகளை விவாதித்து தீர்வுகாண நிர்வாகங்கள் முன்வராவிட்டால், ஜூலை 24ஆம் தேதியன்று காலை 10 மணிக்கு , சென்னையில் கூட்டமைப்பு சங்க தலைவர்கள் சங்கத்திற்கு இரண்டு பேர் என்ற அடிப்படையில் உண்ணாவிரத போராட்டத்தை துவக்குவது என முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் உண்ணாவிரதம் துவங்கிய பின்பு நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வலியுறுத்தியும் அனைத்து நிர்வாக இயக்குநர்களுக்கும் அந்தந்த கழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் மிஸ்டு கால் ( Missed Call ) கொடுக்கவும் முடிவு செய்துள்ளோம் .
எனவே கீழ்க்காணும் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி தருமாறு அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம்.
1. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அரசாணையில் தொழிலாளர்களுக்கு எவ்வாறு வருகைப்பதிவேடு பராமரிக்கப்படவேண்டும் என்பது மிகவும் தெளிவாக வரையறை செய்யப்பட்டுள்ளது . ஆனால் மே மற்றும் ஜூன் மாதங்களில் அரசாணைக்கு புறம்பாக நிர்வாகங்கள் நடவடிக்கை மேற்கொண்டதால் பல தொழிலாளர்கள் சம்பள இழப்புக்கு உள்ளாக்கப்பட்டதுடன், தொழிலாளர்களின் விடுப்பை கழித்து சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. இதை சரிசெய்து அரசாணை அடிப்படையில் தொழிலாளர்களுக்கு ஊதியம் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
2. பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் தொழில்நுட்ப பணியாளர்களுக்கும் அலுவலக பணியாளர்களுக்கும் எவ்வித பணியும் இல்லை . இந்நிலையில் தொழில்நுட்ப பணியாளர்களை பணிக்கு வர நிர்பந்தித்து அத்தியாவசியமற்ற பணிகள் செய்ய நிர்பந்திக்கப்படுகின்றனர். எனவே அரசாணைகளில் குறிப்பிட்டுள்ளபடி விதிவிலக்களிக்கப்பட்ட தொழிலாளர்களை எக்காரணம் கொண்டும் பணிபுரிய அனுமதிக்க கூடாது.