சென்னை தலைமைச்செயலகத்தில் தமிழ்நாடு வேளாண் மற்றும் உழவர் நலத்துறைச்செயலரை, விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் நாராயணசாமி சந்தித்து மனு அளித்தார். பின்பு நாராயணசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், 'தமிழ்நாட்டில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் மக்காச்சோளம், கம்பு, திணை உள்ளிட்ட தானியப்பயிர்களுக்கும் இஞ்சி, பூண்டு, தேங்காய் உள்ளிட்ட பயிர்களுக்கும் என்றும் இல்லாத அளவு செஸ் வரியைத் தமிழ்நாடு அரசு விதித்துள்ளது. குவிண்டாலுக்கு 30 ரூபாய் வரை வசூலிக்கப்படும் இந்த செஸ்வரியால் விவசாயிகளுக்கு 15 ஆயிரம் கோடிக்கும் மேல் பொருளாதார இழப்பு ஏற்படும் நிலை உருவாகும்' எனத் தெரிவித்தார்.
'2008ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால் செஸ் வரி கொண்டுவரப்பட்டுக் கடந்த அதிமுக ஆட்சியில் இந்த வரி ரத்து செய்யப்பட்டது. தற்போது மீண்டும் செஸ் வரியை ரத்து செய்ய தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்' எனவும் கோரிக்கை வைத்தார்.