சென்னை : தமிழகத்தில் தற்போது விவசாய இடங்களில் சிப்காட் அமைப்பது தொடர்பாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. செய்யாறு அருகே சிப்காட் தொழில்பேட்டை செயல்பட்டு வருகிறது. ஏற்கெனவே 2 அலகுகள் செயல்பட்டு வரும் நிலையில், சிப்காட் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் மேல்மா கிராமப்பகுதியில் மூன்றாம் அலகு அமைக்க திட்டமிடப்பட்டு, அதற்கான நிலங்களைக் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
சிப்காட் விரிவாக்கப் பணிக்காக விளைநிலங்களைக் கையகப்படுத்தக் கூடாது என எதிா்ப்புத் தெரிவித்து, பல்வேறு விவசாய சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. முதல் சிப்காட் வளாகம் 1,593 ஏக்கர் பரப்பளவில் இருக்கிறது.
இதில் 13 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இரண்டாவது சிப்காட் வளாகம் 5,683 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது. இதில் 55 நிறுவனங்கள் செயல்படுகின்றன. ஆனால் இதில் பாதிக்கும் மேற்பட்ட இடங்கள் காலியிடங்களாகவே இருக்கின்றன.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டம், வளையப்பட்டி பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதைத் தவிா்க்க வலியுறுத்தி ஓராண்டாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், சிப்காட் தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தை முழுமையாக கைவிடக்கோரியும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் இன்று (நவ.29) சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் விவசாய முன்னேற்றக் கழகம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து விவசாய முன்னேற்றக் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் பாலச்சுப்பிரமணியன் பேசுகையில், “நாமக்கல் மாவட்டம், வளையப்பட்டி பகுதியில் சிப்காட் தொழிற்சாலை அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியில் தமிழக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் சிதைந்துள்ளது.
ஏற்கனவே, சிப்காட் நிறுவனத்திற்கு 15,000 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் காலியிடங்களாகவே உள்ளது. தமிழகத்தில் விவசாய நிலங்களில் சிப்காட் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க:நடுவானில் கணவன் - மனைவி சண்டை! ஜெர்மனி - பாங்காக் விமானம் டெல்லியில் அவசர தரையிறக்கம்!