சென்னை:தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்தில் வரலாறு காணாத வகையில் பெய்த கனமழையால், ஆயிரக்கணக்கான ஹெக்டேர் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. மேலும், வயல்வெளிகள் குளம் போல காட்சியளித்து தண்ணீரில் மிதக்கிறது.
குறிப்பாக காவிரி டெல்டா பாசன மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், கரூர், டெல்டா பாசனமில்லாத மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் வடகிழக்குப் பருவ மழையின் காரணமாக இரவு பகலாக கனமழை பெய்தது. இதனால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
ஒரு சில மாவட்டங்களில் நடவை முடிவடைந்து வளரும் பருவத்தில் நெற்பயிர்கள் உள்ள நிலையில் வெள்ளப் பெருக்கு காரணமாக வயல்களில் மழைநீர் குளம்போல் தேங்கி பயிர்களை மூழ்கடித்துள்ளது. சில மாவட்டங்களில், அறுவடைக்கு நெற்கதிர்கள் தயாரான நிலையில், இந்த கனமழையின் காரணமாக, மறுபடியும் முளைக்கத் தொடங்கிவிட்டது.
இந்த கனமழை, தோட்டப்பயிர்களையும் விட்டு வைக்கவில்லை. பல மாவட்டங்களில் பல ஆயிரம் ஹெக்டேர் பயிரிடப்பட்ட உளுந்து, பாசிப்பயறு, வாழை, மக்கா சோளம், பருத்தி, மரவள்ளிக்கிழங்கு ஆகியவை அறுவடைக்குத் தயாராக இருந்தது. ஆயினும், மழைக்கு இந்த பயிர்கள் தாக்குப் பிடிக்க முடியவில்லை. இன்னும் சில நாள்கள் தொடர்ந்து தண்ணீர் தேங்கினால், வாழைகளும் அழுகி சேதம் அடையும் சூழல் இருக்கிறது என்பது விவசாயிகளின் குமுறலாக இருக்கிறது.
மழைநீர் வடிந்த பிறகு பயிர் சேதம் குறித்து அலுவலர்கள் ஆய்வு செய்து மதிப்பீடு செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழுமையான காப்பீடு தொகை வழங்கவும், மீண்டும் விவசாயிகள் விவசாயம் செய்வதற்கு வட்டி இல்லா கடன் வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், விவசாயக் கடன்களையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுத்தியுள்ளனர்.
ஏற்கெனவே, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிவர் புயல், தொடர் மழை ஆகியவையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். ஆனால், ஜனவரி மாத மழையின் பாதிப்பை மதிப்பீடு செய்து நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கெனவே, நிவர், புரவி புயலினால் டெல்டா மாவட்டங்களில் 7 லட்சத்து 86 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்பானது என்றும், 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் தண்ணீரினால் சூழப்பட்டுள்ளது என்றும் வேளாண் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.