சென்னை:உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று (அக். 18) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் 16வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தை காண்பதற்கு, உள்ளூர் மட்டுமின்றி மேற்கு இந்திய தீவுகள், இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்துதும் ரசிகர்கள் சென்னைக்கு படையெடுத்து உள்ளனர்.
ஐசிசி நடத்தும் 13வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரானது, வரும் நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டி இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. உலக கோப்பை தொடரின் 16வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதனாத்தில் நடைபெற்று வருகிறது.
பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய லீக் ஆட்டத்தில், ஆப்கானிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்த ஆட்டத்தை காண்பதற்கு, மேற்கு இந்திய தீவுகள், இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ரசிகர்கள் சென்னைக்கு படையெடுத்து வந்து உள்ளனர்.
மேற்கு இந்திய தீவுகளில் இருந்து சென்னைக்கு வந்து உள்ள இந்திய வம்சாவளியான அமர்லால் பிரசாத் கூறுகையில், "1912 ஆம் ஆண்டே என் முன்னோர்கள் மேற்கு இந்திய தீவுகளுக்கு சென்றனர். நான் மேற்கு இந்திய தீவுகளில் உள்ள டிரினிடாட் மற்றும் டொபாகோ நாட்டின் நேவியில் கிரிக்கெட் வீராரக இருந்தேன்.
கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டு, அதில் எந்த நாட்டின் அணி சிறப்பாக திறமையை வெளிப்படுத்துகிறதோ, அந்த அணியை பாரட்டுவது தான் சிறப்பான ரசிகர் செயலாகும். சென்னையில், இந்த போட்டிக்காக வந்துள்ளேன். மேலும் இம்முறை வெஸ்ட் இண்டீஸ் அணி உலக கோப்பையில் பங்கு பெறாதது மிகவும் வருத்தம் அளிக்கிறது. ஆனாலும் இம்முறை, நியூசிலாந்து திறமையாக விளையாடி கொண்டிருக்கிறது" என்று கூறினார்.