சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'லியோ'. மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணி இணைந்துள்ளதால், இப்படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன், கௌதம் மேனன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் இசையமைப்பாளர் அனிருத் இசை அமைத்துள்ளார்.
இம்மாதம் 19ஆம் தேதி உலகம் முழுவதும், இப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பாதுகாப்பு காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. இது விஜய் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் இன்று லியோ படத்தின் டிரெய்லர் சன் டிவி தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது.
இந்நிலையில் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று, சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது. டிரெய்லர் வெளியீட்டுக்காக தமிழகம் முழுவதும் உள்ள சில திரைப்படங்களில் ரசிகர்கள் கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதேபோல் சென்னை ரோகிணி திரையரங்கில் ரசிகர்கள் கொண்டாட்டம் நடைபெற்றது.