தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக ரவுடிகள் என்கவுன்ட்டர் செய்யப்படுவதும், கைது செய்யப்படுவதுமான சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. அதன்படி, நேற்று (ஆகஸ்ட் 21) சென்னை அயனாவரத்தில் ரவுடி சங்கர் காவல்துறையினரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக பிரபல ரவுடி திருவேங்கடம் கிண்டி வந்துள்ளதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. மேலும் திருமண நிகழ்ச்சிக்காக தெரு முழுவதும் திருவேங்கடத்தின் பெயர் பொறித்த சுவரொட்டிகள் ஓட்டப்பட்டும் இருந்துள்ளன. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற கிண்டி காவல்துறையினர், ரவுடி திருவேங்கடத்தை சுற்றிவளைத்து பிடிக்க முயற்சித்தனர். அப்போது ரவுடி காவல்துறையினரை தகாத வார்த்தைகளால் திட்டியும், கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.