சென்னை: புளியந்தோப்பு நரசிம்ம நகர், 3-ஆவது தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் என்ற ஆற்காடு சுரேஷ் (44). பிரபல ரவுடியான இவர் மீது வழக்கறிஞர் பகத்சிங் கொலை வழக்கு, ரவுடிகள் ராதாகிருஷ்ணன், சின்னா ஆகியோரை கொலை செய்த வழக்கு உட்பட 6 கொலை வழக்கு, 25 கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவை தவிர ஆள் கடத்தல் வழக்குள் என மொத்தம் 32-க்கும் மேற்பட்ட வழக்குகள் இவர் மீது உள்ளது.
இந்நிலையில் இன்று (ஆக 18) வழக்கு சம்பந்தமாக ஆற்காடு சுரேஷ் அவரது வழக்கறிஞருடன் எழும்பூர் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார். பின்னர் மாலை ஆற்காடு சுரேஷ் மற்றும் அவரது நண்பர் மாதவன் ஆகியோர் பட்டினம்பாக்கத்தில் உள்ள உணவகத்தில் சாப்பிட வந்து கடற்பரப்பில் அமர்ந்துள்ளனர்.
அப்போது ஆற்காடு சுரேஷை பின் தொடர்ந்து காரில் வந்த அடையாளம் தெரியாத 6 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று அரிவாளால் ஆற்காடு சுரேஷை சரமாரியாக வெட்டிய போது, அதை தடுக்க வந்த மாதவனுக்கும் வெட்டு விழுந்துள்ளது. பின்னர் ஆற்காடு சுரேஷை சரமாரியாக வெட்டிவிட்டு காரில் வந்த கும்பல் தப்பிச்சென்றுள்ளது.
இச்சம்பவத்தில் படுகாயமடைந்த ஆற்காடு சுரேஷை அருகிலிருந்த பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். லேசான காயமடைந்த மாதவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த கொலை சம்பவம் தொடர்பாகப் பட்டினப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய கொலையாளிகளைப் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷ் நுங்கம்பாக்கத்தில் உள்ள சிவில் சப்ளை கம்பெனியில் எழுத்தராக பணியாற்றி வந்ததும், நியாயவிலைக்கடை அரிசி உள்ளிட்ட பொருட்களை சுரேஷ் கடத்தி வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடத்தல் கும்பல் ஒன்றுக்கும் ஆற்காடு சுரேஷுக்கும் ஏற்பட்ட தகராற்றில் முதல்முறையாக ஆற்காடு சுரேஷ் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். புழல் சிறையில் இருந்த போது ரவுடி சின்னாகேசவலு என்ற சின்னா என்பவருடன் சேர்ந்து கொலை, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஆற்காடு சுரேஷ் ஈடுபட்டு வந்துள்ளார்.