சென்னை:நுங்கம்பாக்கம், ஹாடோஸ் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த புகழ்பெற்ற பின்னணி பாடகி வாணி ஜெயராம் (78) காலமானார். இவர் கடந்த 10 ஆண்டுகளாக இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி குழந்தை இல்லாத நிலையில் இவரது கணவர் ஜெயராம் கடந்த 2018ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் காலமானார். அதன் பின் வாணி ஜெயராம் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இவர் 1945 ஆம் ஆண்டு தமிழகத்தின் வேலூரில் பிறந்தவர். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் கலைவாணி ஆகும். சிறுவயதிலேயே இசையின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக தன்னுடைய இனிமையான குரலால் வானுயர வளர்ந்து நிற்பவர். இவர், டி.ஆர். பாலசுப்ரமணியம், ஆர்.எஸ். மணி ஆகியோரிடம் கர்நாடக இசையைப் பயின்றவர்.
வானொலியில், ஒலிபரப்பாகும் பாடல்களைக் கேட்டுக் கேட்டு தானும் ஒரு பாடகியாக வேண்டும் என்கிற ஆசையை மனதில் வைத்து அதன்படி சாதித்தும்காட்டியவர். இசை மீது வாணி ஜெயராமுக்கு இருந்த தீரா காதல் இவரை இந்திய அளவில் புகழ்மிக்க பாடகியாக மாற்றியது. ஒரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னர் ஒரு ஆண் இருப்பர் என்பது வாணி ஜெயராம் விஷயத்தில் 100 சதவீதம் உண்மை. மனைவியின் பாடகி ஆசையை நிறைவேற்றப் பக்க பலமாய் நின்றார் அவரின் கணவர் ஜெயராம். 1971-ம் வருடம் வெளிவந்த ‘குட்டி’ (GUDDI) என்ற இந்திப் படத்தில், வசந்த் தேசாயின் இசையில் ‘போலே ரே பப்பி ஹரா’ என்ற ‘பாடலைப் பாடி திரையுலகில் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார் வாணி ஜெயராம்.
இவரது முதல் பாடலே அமோக வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, இசையமைப்பாளர்களால் தேடப்படும், முன்னணி பாடகியாக உருவெடுத்தார். ஹிந்தியைத் தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு, குஜராத்தி, ஒடியா, பெங்காலி என 10க்கும் மேற்பட்ட மொழிகளில் பாடல்களை பாடி பிரபலமானார். வாணி ஜெயராம் தமிழில் 1973 தாயும் சேயும் என்ற படத்தின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானார்.
1974-ல் தீர்க்கசுமங்கலி ௭ன்ற திரைப்படத்தில் இவர் பாடிய ”மல்லிகை என் மன்னன் மயங்கும்” பட்டிதொட்டியெங்கும் இவரது புகழை பரவச் செய்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மராத்தி, ஒடியா, குஜராத்தி மற்றும் பெங்காளி ௭ன 19 மொழிகளில் 1000 படங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல்வேறு இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார்.