சென்னை: இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலமாக நடனமாடி வீடியோ வெளியிட்டு சமூக வலைதளங்களில் பிரபலமானவர், டான்ஸர் ரமேஷ்(42). மூர் மார்க்கெட் பகுதிகளில் சினிமா பாடலுக்கு டான்ஸ் ஆடி வெளியிட்ட வீடியோ வைரலாகி பிரபல தனியார் தொலைக்காட்சி நடன நிகழ்ச்சியில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
இதில் அசத்தி மேலும் பிரபலமான டான்ஸரான ரமேஷுக்கு(Dancer Ramesh), நடிகர் அஜித் நடிப்பில் வெளியான 'துணிவு' மற்றும் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக உள்ள 'ஜெயிலர்' ஆகிய படங்களிலும் சிறு வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிட்டியது. இவர், மூர் மார்க்கெட் பகுதியில் முதல் மனைவி சித்ரா மற்றும் இரண்டு மகள்கள் உடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் சமூக வலைதளத்தில் பிரபலமான டான்ஸர் ரமேஷ் இன்று (ஜன.27) மாலை புளியந்தோப்பு பகுதியில் உள்ள கே.பி. பார்க் அடுக்குமாடி குடியிருப்பில் தற்கொலையால் உயிரிழந்ததாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. குறிப்பாக, புளியந்தோப்பு கே.பி. பார்க் பகுதியில் தங்கி இருக்கும் இரண்டாவது மனைவியான இன்பவள்ளி வீட்டிற்குச் சென்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதுதொடர்பாக, பேசின் பிரிட்ஜ் போலீசார் விசாரணை செய்ததில், இன்று பிறந்தநாள் என்பதால் பார்ட்டி வைப்பதற்காக பணம் கேட்டு இரண்டாவது மனைவி இன்பவள்ளியிடம் தொந்தரவு செய்ததாகவும், அவர் பணம் தராத காரணத்தினால் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. சமூக வலைதளம் மூலம் பிரபலமாகி தொலைக்காட்சிகளில், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கு பெற ஆரம்பித்த உடன் முதல் மனைவி மற்றும் இரண்டாவது மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.