சென்னை:தமிழ்நாட்டில் தேர்தல் நாள் நெருங்க நெருங்க, அனைத்துக் கட்சியினரும் தாங்கள் வெற்றிபெறும் முனைப்பில் தேர்தல் பணிகளிலும், பரப்புரையிலும் ஈடுபட்டுவருகின்றனர்.
அப்போது தங்களை எதிர்த்துக் களம்காணும் வேட்பாளர்களையும், அவர்களின் கட்சிகளையும் தாக்கிப் பேசுவது இயல்பு. ஆனால், தற்போது தேர்தல் விதிமுறைகளை மீறியும், தனிநபர்களைக் கடந்து குடும்பத்தினர், உயிரிழந்தவர்கள் எனப் பலர் குறித்தும் கருத்துத் தெரிவித்துவருகின்றனர். இது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஆ. ராசா, திண்டுக்கல் லியோனி, தயாநிதி மாறன், அண்ணாமலை, ராதாரவி ஆகியோரைத் தொடர்ந்து தற்போது திமுக இளைஞரணிச் செயலாளரும் திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி வேட்பாளருமான உதயநிதி ஸ்டாலினின் தேர்தல் பரப்புரை பேச்சு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முன்தினம் (மார்ச் 31) திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே பரப்புரை மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின், மூத்த அரசியல் தலைவர்களை ஓரம்கட்டிவிட்டு தனக்கு அரசியலில் முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகக் கூறிய பிரதமர் மோடியின் குற்றச்சாட்டிற்குப் பதிலளிக்கும்விதமாகப் பேசினார்.
அப்போது, 'பிரதமர் மோடி - அத்வானி, வெங்கையா நாயுடு உள்ளிட்ட பலரை ஓரங்கட்டிவிட்டு பிரதமரானார். அவர் குஜராத் முதலமைச்சரானதும் அவ்வாறே' என்றார். அதுமட்டுமின்றி, அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் இருவரும் பிரதமர் மோடி கொடுத்த அழுத்தத்தைத் தாங்க முடியாமலேயே உயிரிழந்தனர் எனவும் கூறியுள்ளார். இவரது இந்தக் கருத்து பொதுவெளியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.