சென்னை:திமுக சுற்றுச்சூழல் அணியின் மாநில செயலாளராக இருப்பவர் கார்த்திகேய சிவசேனாபதி. இவர் இன்று(செப்.24) தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபுவை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார்.
அந்த புகாரில், " திமுகவில் சுற்றுச்சூழல் அணியின் மாநில செயலாளராகவும், காங்கேயம் சேனாபதி கால்நடை ஆராய்ச்சி மையத்தின் தலைவராகவும் இருந்து வருகிறேன். எனது குடும்பம் கொங்கு பகுதியில் நன்கு அறியப்பட்ட குடும்பம். எங்களது குடும்பத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும், எங்கள் குடும்பப் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், எங்கள் பகுதியில் வாழும் இரு சமூகத்திற்கு இடையே வன்முறையை தூண்டும் வகையிலும் தொடர்ச்சியாக சிலரால் பொய் செய்திகள் வாட்ஸ் ஆப், சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
குடும்பத்தாருக்கு மன உளைச்சல்
இதனால் என்னுடைய பொது வாழ்விற்கு களங்கமும், என்னுடைய குடும்பத்தாருக்கு அதீத மன உளைச்சலும் ஏற்படுகிறது. இரு சமூகத்திற்கு இடையே வன்முறையை ஏற்படுத்தும் சூழலை சிலர் உருவாக்க முயற்சிப்பதாக சந்தேகப்படுகிறேன். எனவே இதன் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு கொள்கிறேன்" என்று அதில் கூறியுள்ளார்.