சென்னை: சென்னை வடபழனி காவல் நிலைய உதவி ஆய்வாளர் குழுவினர், வடபழனி திருநகர் 1வது தெரு மற்றும் 100 அடிசாலை சந்திப்பு அருகே கண்காணிப்பு பணியிலிருந்தபோது, அங்கு Police ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் அருகில் , காவல் உதவி ஆய்வாளர் சீருடையில் சந்தேகப்படும்படி ஒருவர் நின்றிருந்துள்ளார்.
இதையடுத்து போலீசார் அவரை விசாரணை செய்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகத்தின் பேரில், அவரது காவல்துறை அடையாள அட்டையை வாங்கி பார்த்தபோது, அது போலியானது என தெரிய வந்துள்ளது. இதையடுத்து அந்த நபரை வடபழனி காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தபோது, அவர் ராமாபுரத்தைச் சேர்ந்த அஷ்வின் என்ற அஷ்வின்ராஜ் (30) என்பது தெரிய வந்துள்ளது.
மேலும், இவர் காவல் உதவி ஆய்வாளர் சீருடை அணிந்து, Police ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட புல்லட் இருசக்கர வாகனத்தில் வடபழனி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளுக்குச் சென்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் போலீஸ் எனக்கூறி, மிரட்டி பணம் பறித்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
பின்னர் அவர் மீது வழக்குப் பதிவு செய்து, காவல்துறை உதவி ஆய்வாளர் சீருடை, போலி காவல்துறை அடையாள அட்டை, புல்லட் இருசக்கர வாகனம், 6 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் செல்போன் உள்ளிட்டவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட அஷ்வின் என்ற அஷ்வின்ராஜ், விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க:ஸ்மார்ட் வாட்ச்சால் காவலர் பணியிடை நீக்கம்.. தவறான சிகிச்சையால் மருத்துவர் கைது - சென்னை குற்றச் செய்திகள்!