தமிழ்நாடு

tamil nadu

விடுதலைப்புலிகளுக்கு பெண் நிதி திரட்டிய வழக்கு: மேலும் 5 பேர் கைது

விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக நிதி திரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட இலங்கை பெண்ணிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், இலங்கை நாட்டைச் சேர்ந்த மேலும் ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

By

Published : Mar 6, 2022, 9:01 AM IST

Published : Mar 6, 2022, 9:01 AM IST

விடுதலைப்புலிகளுக்கு பெண் நிதி திரட்டிய வழக்கு
விடுதலைப்புலிகளுக்கு பெண் நிதி திரட்டிய வழக்கு

சென்னை:சென்னை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட் வைத்திருந்ததாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இலங்கை நாட்டைச் சேர்ந்த லெட்சுமணன் மேரி பிரான்சிஸ்கோ (40) என்ற பெண் விமான நிலைய குடியுரிமை அலுவலர்களால் கைது செய்யப்பட்டார். அதன் தொடர்ச்சியாக அவருக்கு உடந்தையாக இருந்த இலங்கை நாட்டைச் சேர்ந்த கென்னிஸ்டன் பெர்னாண்டோ, தர்மேந்திரன், ஜான்சன் சாமுவேல் மற்றும் சென்னையைச் சேர்ந்த மோகன் ஆகியோர் தமிழ்நாடு கியூ பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இலங்கை பெண் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக நிதி திரட்டி பல்வேறு வங்கி கணக்குகள் மூலம் அனுப்பி வந்ததும், கடந்த 2018ஆம் ஆண்டு போலி பாஸ்போர்ட் மூலமாக சென்னைக்கு வந்து அண்ணா நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி ஆதார் அட்டை, கேஸ் இணைப்பு போன்ற ஆவணங்கள் வாங்கி அதன் மூலமாக இந்திய பாஸ்போர்ட் வாங்கியதும் விசாரணையில் தெரியவந்தது.

ரூ. 42 கோடி பணம் அனுப்ப முயற்சி

தடை செய்யப்பட்ட இயக்கத்தினருடன் தொடர்பு இருப்பதால் இந்த வழக்கானது தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. அவர்கள் நடத்திய விசாரணையில் இலங்கை பெண் போலி பாஸ்போர்ட் மூலமாக மும்பைக்கு சென்று அங்குள்ள வங்கி ஒன்றின் மூலமாக இங்கிலாந்தைச் சேர்ந்த நபருக்கு 42 கோடி ரூபாய் பணம் அனுப்ப முயன்றதும் தெரியவந்தது. இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்புள்ளது எனத் தேசிய புலனாய்வு பிரிவு அலுவலர்கள் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த கும்பலை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மற்றொரு இலங்கையைச் சேர்ந்த குடும்பத்தினர் போரூரில் வசித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

அதனடிப்பையில் நேற்று(மார்ச் 5) சென்னை தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் போரூரில் வசித்துவந்த இலங்கை நாட்டைச் சேர்ந்த ஜெரால்டு கிலேசியஸ் (49), அவரது மனைவி மஞ்சுளா மற்றும் மூன்று மகள்கள் உள்பட ஐந்து நபர்கள் தங்கியிருந்த வீட்டை சோதனையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

5 பேர் கைது

விசாரணையில் கடந்த 2007ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து அகதியாக சென்னைக்கு வந்த ஜெரால்டு குடும்பத்தினர் போரூரில் வசித்து வருவது தெரியவந்தது. போலி ஆவணங்கள் மூலமாக ஜெரால்டு அனைவருக்கும் ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை எடுத்து அதன் மூலமாக இந்திய பாஸ்போர்ட் வாங்கியதும் தெரிய வந்தது. மேலும் குடும்பத்தாருடன் கனடா நாட்டில் குடிபெயர திட்டம் இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் அளித்த தகவலின் பேரில் எஸ்ஆர்எம்சி காவல்துறையினர் மோசடி உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இலங்கை நாட்டைச் சேர்ந்த ஐந்து பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களும் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக செயல்பட்டுள்ளனரா என்பது குறித்து தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: விமானத்தில் கோளாறு காரணமாக அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்காத அமைச்சர்கள்

For All Latest Updates

TAGGED:

Nia raid

ABOUT THE AUTHOR

...view details