சென்னையில் இருந்து போலி பாஸ்போர்ட்களில், இலங்கையின் யாழ்ப்பாணம் நகருக்கு செல்ல முயன்ற 2 இலங்கை பெண்களை கடந்த வாரம் சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் பிடித்தனர். இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பான விசாரணையில், இருவரும் தாய், மகள் என்பது தெரிய வந்தது.
கங்கா என்கிற கங்கேஸ்வரி, அவரது மகள் ஸ்வர்ஜலா இருவரும் இலங்கை யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்டவர்கள். கடந்த 2007ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து கங்கா, அவரது கணவர் சுந்தரதாச குருக்கள் மகள் ஸ்வர்ஜலா குடும்பத்துடன் சென்னை வந்து சென்னை ஆலப்பாக்கம் மெட்ரோ நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
2013ஆம் ஆண்டு சுந்தரதாச குருக்கள் உயிரிழந்தவிட, தாய்-மகள் இருவரும் இங்கு வசித்து வந்துள்ளனர். கங்கா பியூட்டிஷியன் தொழிலை மேற்கொண்டு வந்துள்ளார். அவரது மகள் திருவேற்காட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் படித்துவிட்டு வேலை தேடி வந்துள்ளார். 2017ஆம் ஆண்டுக்கு பிறகு இருவரது பாஸ்போர்ட்டும் காலாவதியாகிவிட 5 வருடங்களுக்கும் மேல் சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கி வந்த இருவரும், இலங்கையில் உள்ள உறவினர்களை பார்ப்பதற்கு செல்ல திட்டமிட்டனர்.