மருத்துவக் கலந்தாய்வின் போது தீக்ஷா என்ற மாணவி போலியான நீட் மதிப்பெண் சான்றிதழை பயன்படுத்தி கலந்து கொண்டதாக மருத்துவக்கல்வி கூடுதல் இயக்குனர் செல்வராஜன் பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக மாணவியின் தந்தை பல் மருத்துவரான பாலச்சந்திரன் மற்றும் தீக்ஷா மீது 6 பிரிவுகளின் கீழ் பெரியமேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக மூன்று முறை சம்மன் அனுப்பியும் பாலச்சந்திரன் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார்.
இந்நிலையில் கடந்த ஒன்றாம் தேதி பல்மருத்துவர் பாலச்சந்திரனை பெங்களூருவில் வைத்து தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் போலியான சான்றிதழை இடைதரகர் ஜெயராமனிடம் ரூ. 25ஆயிரம் கொடுத்து வாங்கியதாக தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் இடைதரகரை தனிப்படை காவல்துறையினர் தேடி வருகின்றனர். பின்னர் பல் மருத்துவர் பாலசந்திரனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் போலி மதிப்பெண் சான்றிதழ் மற்றும் கலந்தாய்வு சான்றிதழை தயாரித்தது யார் எனவும், பின்னணியில் யார் யார் உள்ளார்கள் என பாலசந்திரனிடம் விசாரிக்க வேண்டுமென பெரியமேடு காவல்துறையினர் எழும்பூர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.
இந்த மனு மீதான விசாரணை நேற்று வந்தது. அப்போது பல் மருத்துவர் பாலசந்திரனை 4 நாள்கள் போலீஸ் காவல் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி பல்மருத்துவர் பாலச்சந்திரனை போலீஸ் காவலில் வைத்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. மேலும் தலைமறைவான மாணவி தீக்ஷாவை கைது செய்யவும் தனிப்படை காவல்துறையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க:நிதி நிறுவனம் நடத்தி ரூ.2.50 கோடி மோசடி: திருச்சியில் தம்பதியர் கைது!