சென்னை நெற்குன்றம் பல்லவன் நகர் பள்ளிக்கூடம் தெருவைச் சேர்ந்தவர் நூருல்லா (48). இவர் பூந்தமல்லி நெடுஞ்சாலைப் பகுதியில் கறிக்கடை நடத்திவருகிறார்.
கடந்த திங்கள்கிழமையன்று காலை நூருல்லா வீட்டிற்கு காரில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல், தாங்கள் வருமானவரித் துறை அலுவலர்கள் என்று அறிமுகப்படுத்தி கொண்டுள்ளனர். பின்னர் அந்தக் கும்பல், நூரூல்லா வீட்டில் சோதனை செய்யப்போவதாகக் கூறி வீட்டினுள்ளே நுழைந்துள்ளனர்.
பின்னர், பீரோவிலிருந்த ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தையும் 10 சவரன் நகைகளையும் எடுத்துள்ளனர். அப்போது, அதனைத் தடுத்த நூருல்லாவை, அந்தக் கும்பல் சரமாரியாகத் தாக்கிவிட்டு காரில் தப்பிச் சென்றுள்ளனர்.
இது குறித்து, நூருல்லா கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணையை தொடங்கியுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், அங்குள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை தொடங்கினர். இதன்மூலம், தென்காசியைச் சேர்ந்த செந்தில்குமார், வெங்கடேஷ் ஆகியோரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.
பின்னர், அவர்களிடமிருந்த போலி வருமானவரித் துறை அலுவலர் அடையாள அட்டைகளையும் பணம், நகைகள் உள்ளிட்டவற்றைகளையும் காவல் துறையினர் பறிமுதல்செய்தனர். மேலும், இரண்டு குற்றவாளிகளை காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: ஆந்திரா தங்க நகை வியாபாரி வழக்கு: 4 ஈரானிய கொள்ளையர்கள் கைது!