சென்னை:இது தொடர்பாக சென்னை காவல்துறை வெளியிட்ட தகவலின் படி, உண்மையான மருத்துவர் அளித்த புகாரால் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். தஞ்சையைச் சேர்ந்த மருத்துவரான செம்பியன் கடந்த பிப்ரவரி 7ம் தேதி சென்னை காவல்துறையில் அளித்த புகாரில், தான் ரஷ்யாவில் மருத்துவம் பயின்றுவிட்டு தற்போது டெல்லியில் பணியாற்றி வருவதாகவும், இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருந்த போதும், தமிழ்நாட்டில் பணியாற்றாததால் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யவில்லை என கூறியுள்ளார்.
சமீபத்தில் திருமணம் நடைபெற்ற நிலையில் மீண்டும் தமிழ்நாட்டிலேயே குடியேறலாம் என தனது மேற்படிப்பு சான்றிதழை தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய முயன்றதாகவும், ஆனால் இதே பெயர், சான்றுடன் வேறு ஒருவர் ஏற்கெனவே பதிவு செய்துவிட்டதாக, அவரது மனு நிராகரிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவர் செம்பியன் அரும்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் அலுவலகத்திற்குச் சென்று இது குறித்து விசாரித்துள்ளார்.
அப்போது, வேறு ஒரு தொலைபேசி எண் மற்றும் இ-மெயில் முகவரி பதிவாகி இருப்பதாகவும், எழுத்துப்பூர்வ புகார் அளிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர். அதேபோல மெடிக்கல் கவுன்சில் மற்றும் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்ததன் பேரில், இந்த வழக்கு அண்ணா நகர் சைபர் கிரைம் காவல் துறையினருக்கு மாற்றப்பட்டது.
கடந்த 7ஆம் தேதி வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், காவல் ஆய்வாளர் சாந்திதேவி தலைமையில் தனிப்படை அமைத்து மோசடி குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மருத்துவர் செம்பியன் பெயரிலே உள்ள மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு செம்பியன் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, அந்நபரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். இவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அவர் அளித்த வாக்குமூலத்தின்படி, மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த செம்பியன் (31) 2012 புதுக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு வேலைத்தேடி சென்னை வந்த நிலையில் படித்தப்படிப்புக்கு வேலை கிடைக்காததால் தனியார் நிறுவனத்தில் (JUST DIAL) மூன்று மாதம் பணியாற்றியுள்ளார்.
பின்பு தனியார் மருத்துவமனையில் மார்க்கெட்டிங் வேலையில் சேர்ந்துள்ளார். தனியார் ஐடி நிறுவனங்கள் மற்றும் பெரிய நிறுவனங்களுக்குச் சென்று தங்களது மருத்துவமனையைப் பற்றி எடுத்துக்கூறி நோயாளிகளை தங்கள் மருத்துவமனைக்கு சேர்ப்பதே இவருக்கு வேலையாக இருந்துள்ளது. அதனால் மருத்துவம் பற்றி நன்கு தெரிந்து கொண்ட இவர் அதிகளவில் பணம் புரளுவதையும் தெரிந்துகொண்டு, மருத்துவத்துறை மீது இவருக்கு ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் மருத்துவராக மாற முடிவு எடுத்துள்ளார். இதற்காக FIRST AID, FIRE AND SAFETY, SCAN போன்ற டிப்ளமோ படிப்புகளை படித்துள்ளார். மேலும் கூகுள் மூலமாக தனது பெயரில் உள்ள மருத்துவர்களை தேடியுள்ளார். மூன்று மருத்துவர்கள் இதே பெயரில் உள்ள நிலையில், தனது வயதுக்கு ஏற்ப தஞ்சையைச் சேர்ந்த மருத்துவர் இருப்பதால், அவரை தேர்ந்தெடுத்து தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் வெப்சைட்டிற்குச் சென்று பதிவேற்ற முயன்றுள்ளார்.
அதிர்ஷ்டவசமாக நிஜ மருத்துவர் தனது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்த பிறகு பயன்படுத்தாததால் , உள்ளே நுழைந்ததும் முதல் முறையாக பயன்படுத்துபவர்களா எனக்கேட்டு தொலைபேசி எண் மற்றும் இ-மெயில் ஆகியவற்றில் தனது விவரங்களை பதிவு செய்துள்ளார். மேலும், நிஜ மருத்துவர் செம்பியனின் புரொபைலில் இருந்த புகைப்படம் மற்றும் முகவரியை நீக்கிவிட்டு, தனது புகைப்படம் மற்றும் முகவரியை போட்டோ சாப் மூலமாக மாற்றி மோசடியில் ஈடுபட்டுள்ளார். அதன் பிறகு போலி மருத்துவரான செம்பியன் அஸ்ட்ரா மருத்துவமனை மற்றும் நீலாங்கரையில் உள்ள சாந்தி மருத்துவமனை ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார்.
கரோனா காலம் என்பதால் மருத்துவர்களின் தேவை அதிகமாக இருந்ததால் சான்றிதழ்கள் யாரும் முறையாக சரிபார்க்காத நிலையில் தொடர்ந்து பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பாக தரமணியில் ஸ்பார்க் பேமிலி கிளினிக் என்ற பெயரில் பார்மசியுடன் கூடிய மருத்துவமனை நடத்தி வந்துள்ளார். மேலும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் பிரச்னைகளுக்கு ஏற்ப கூகுள் உதவியோடு மருந்துகளைத் தேர்வு செய்து மருத்துவம் பார்த்து வந்தாக செம்பியன் கூறியுள்ளார்.
செவிலியர் போன்ற ஊழியர்களைக்கூட உடன் பணிக்கு வைத்து இருக்கவில்லை. தனது படிப்புகான வேலை கிடைக்காததால் மருத்துவராக மாறியதாகவும், அதிக வருமானம் கிடைத்ததால் தனியாக கிளினிக் நடத்தியதும் தெரியவந்துள்ளது. மேலும், இணையதளங்களில் மருத்துவர் செம்பியன் என்று தேடினாலே தனது பெயர் மற்றும் விவரங்கள் வரும்படி மாற்றி அமைத்து இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து போலி மருத்துவர் செம்பியன் மீது மோசடி, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பிரிவின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், இந்த மோசடியில் செம்பியனுக்கு உடந்தையாக வேறு யாரேனும் ஈடுபட்டுள்ளனரா? மருத்துவ கவுன்சில் அதிகாரிகள், ஊழியர்கள் யாருக்காவது இதில் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக மருத்துவ கவுன்சிலில் பதிவான போலி மருத்துவரின் செல்போன் எண்ணை வைத்து, முகவரியை தேடியபோது அது அவரது பழைய முகவரியாக இருந்ததாகவும், மேலும் செல்போன் சிக்கனல்களை ஆய்வு செய்த போது தரமணி பகுதிகளில் இருப்பது தெரியவந்து, அந்த கிளினிக்கில் நோயாளி போன்று சைபர் கிரைம் காவல் துறையினர் சென்று அவரது நடவடிக்கைகளை கண்காணித்துள்ளனர். பின்னரே அவரை கைது செய்துள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளாகப் பணியாற்றி வந்த போலி மருத்துவரை பிடித்த அண்ணாநகர் சைபர் கிரைம் காவல் துறையினரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.
இதையும் படிங்க:சோழபுரத்தில் குற்றவாளி அதிரடி கைது - நீதிமன்ற வழிகாட்டுதல்களை காற்றில் பறக்கவிட்டதா காவல் துறை?