சென்னை:கணினி மற்றும் லேப்டாப் பயன்படுத்துபவர்கள் ஒவ்வொருவரும் மைக்ரோசாஃப்ட் சாஃப்ட்வேரின் (Microsoft software) லைசென்ஸ் பெறுவதற்கு சுமார் ஒன்பதாயிரம் ரூபாய் நிறுவனத்திற்கு செலுத்தி ஆன்லைனில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திடம் வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். குறிப்பிட்ட ஆண்டுகள் வரை பயன்படுத்த முடியும்.
ஆனால் இதை தவறாக பயன்படுத்தி குறைந்த விலைக்கு கிடைக்கும் பைரேட்டட் (போலியான) வெர்ஷனை பெரும்பாலான கணினி பயன்பாட்டாளர்கள், ஒரிஜினல் லைசன்ஸ் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திடம் வாங்காமல் பயன்படுத்தி வருகின்றனர்.
இதனை சாதகமாகப் பயன்படுத்தி பைரேட்டட் வெர்ஷன் சாஃப்ட்வேரை பயன்படுத்தும் நபர்களை குறிவைத்து மைக்ரோசாஃப்ட் பெயரில் போலி கால் சென்டர் மூலம் ஒரு கும்பல் அவர்களை தொடர்புகொண்டும், மின்னஞ்சல் அனுப்பியும் குறைந்த விலைக்கு மைக்ரோசாஃப்ட் சாஃப்ட்வேர் தருவதாகக் கூறி மோசடி செய்துள்ளனர்.
வைரஸ் லிங்க் அனுப்பி மோசடி
உலகம் முழுவதும் போலி மைக்ரோசாஃப்ட் சாஃப்ட்வேர் மூலம் பலரும் மோசடிக்கு உள்ளாகி வருகின்றனர். இச்சம்பவங்கள் தொடர்பாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் போலி கால் சென்டர் நடத்தும் கும்பல் குறித்து புகார் அளித்ததன் அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சிபிசிஐடி சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் ஆயிரக்கணக்கானோர் இந்த மோசடி கும்பலிடம் சிக்கி, பணத்தை இழந்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்த கும்பல் கணினி பயன்பாட்டாளர்களை அணுகி குறைந்த விலைக்கு மைக்ரோசாஃப்ட் லைசன்ஸின் ட்ரையல் வெர்ஷனை தருவதாக கூறி பயனாளர்களின் கிரெடிட் கார்டு மூலம் பணம் பெற்றுக்கொண்டு வைரஸ் லிங்குடன் கூடிய போலி சாஃப்ட்வேரைக் கொடுத்து அவர்களை பதிவிறக்கம் செய்ய வைக்கின்றனர். பின்னர் அந்த வைரஸ் லிங்க் மூலம் பயனாளர்களின் கணினியில் உள்ள தரவுகளை திருடுவதும் சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்துள்ளது.