சென்னை: கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள மயில் சிலை கடந்த 2004ஆம் ஆண்டு திருடு போனது தொடர்பாக 2018 ஆம் ஆண்டு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த வழக்கை விரைவாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என சென்னை நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மயிலாப்பூர் தெப்பக்குளத்தில் சிலைகள் வீசப்பட்டு இருக்கலாமென சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர், கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி தீயணைப்புத் துறை உதவியுடன் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர்.
குளத்தில் ஆழமாக சென்று முழுவதும் தேட முடியாத காரணத்தினால், தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவனத்தின் உதவியை நாடினர்.
இதன் அடிப்படையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர், தீயணைப்பு துறை மற்றும் தேசிய கடல்சார் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து (மார்ச் 28) முதல் அதிநவீன கருவிகளைக் கொண்டு தெப்பக்குளத்தில் மயில் சிலையை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
டார்னியர் விமானத்தை கடலில் தேட பயன்படுத்தப்படும் இந்த அதிநவீன கருவி மூலம் தெப்பக்குளத்தில் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதனிடையே, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் மயில் சிலை மாயமானது குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.வெங்கட்ராமன் தலைமையில் உண்மை கண்டறியும் குழு அமைத்துள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்த நிலையில் அதற்கான அரசாணை தற்போது வெளியாகியுள்ளது.
மேலும் வெங்கட்ராமன் தலைமையிலான உண்மை கண்டறியும் குழுவுக்கு உதவி புரிய தேவையான அலுவலர்களை நியமிக்கவும் தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. முன்னதாக, சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் 2004ஆம் ஆண்டில் குடமுழுக்கு விழா நடைபெற்றபோது புன்னைவனநாதர் சன்னதியில் இருந்த மயில் சிலை மாயமானதாகப் புகார் கூறப்பட்டது.
இது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு 2018ம் ஆண்டு பதிவு செய்த வழக்கு விசாரணையை விரைந்து முடிக்கக் கோரியும், அறநிலையத் துறை அதிகாரிகளின் தொடர்பு குறித்து துறை ரீதியாக நடத்தப்படும் உண்மை கண்டறியும் விசாரணையை விரைந்து முடிக்கக் கோரியும் ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, சிலை மாயமானது குறித்து விசாரிக்கும் உண்மை கண்டறியும் குழுவின் விசாரணையையும் ஆறு வார காலத்திற்குள் முடிக்க உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மயங்கி விழுந்த சீமான்