தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டால், தமிழகத்தின் முகமே மாறிவிடும்- ராமதாஸ்

சென்னை: தமிழ்நாட்டில் ஊரடங்கு நாள்களில் மதுக்கடைகள் செயல்படாது என அறிவிக்கபட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் மட்டுமல்லாமல் நிரந்தரமாக மதுக்கடைகளை மூடவேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

alcohol free state
மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டால், தமிழகத்தின் முகமே மாறிவிடும்- ராமதாஸ்

By

Published : May 8, 2021, 3:05 PM IST

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"மதுக்கடைகள் மூடப்பட்டால் தமிழ்நாடு அரசின் வருமானம் போய்விடும் என்று கவலைப்படத் தேவை இல்லை. அரசின் இன்றைய ஆண்டு வருமானத்திற்கு இணையான தொகையை வரியில்லா வருவாய் ஆதாரங்களின் மூலம் ஈட்ட முடியும். இதிலிருந்து தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் வருவாய், மது வணிகத்தால் கிடைக்கும் வருவாயை விட அதிகமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஊரடங்கு வரவேற்கத்தக்கது

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் மூடப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வந்த மக்கள் நலன் சார்ந்த இந்த நடவடிக்கைகளை அரசு நடைமுறைப்படுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது.

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நேரத்தில், அதைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசு, மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு நாளை மறுநாள் முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு செயல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது. இது அதிவேகத்தை அடைந்துள்ள கரோனா பரவல் சங்கிலியை துண்டிக்க உதவியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கைக்கு அனைத்துத் தரப்பினரும் தங்களின் முழு ஒத்துழைப்பையும், ஆதரவையும் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

கரோனா பரவலுக்கு ஊக்குவித்துவிடாதீர்கள்

ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் எக்காரணத்தை முன்னிட்டும் வீடுகளை விட்டு வெளியில் வரக்கூடாது. ஊரடங்கு காலத்தில் பயன்படுத்துவதற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக இன்றும், நாளையும் பொதுமக்கள் கடைகளில் குவிவதையும் தவிர்க்க வேண்டும். இது கரோனா பரவலைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை, கரோனா பரவலை ஊக்குவிப்பதாக அமைந்துவிடும்.

கரோனா பரவலுக்கு காரணம் மதுக்கடைகள்

ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பு குறிப்பிடத்தக்கதாகும். தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவுவதற்கு பெரும் காரணமாக இருப்பவை மதுக்கடைகள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இப்போது மதுக்கடைகள் மூடப்படவிருப்பதால் அடுத்த சில வாரங்களில் தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவல் முழுமையாக கட்டுக்குள் வரக்கூடும்.

மதுக்கடைகள் மூடப்படுவது கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையாக மட்டும் இருந்து விடக் கூடாது. தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை ஏற்படுத்துவதற்கான தொடக்கமாக அமைய வேண்டும். மதுக்கடைகள் மூடப்படவுள்ள அடுத்த இரு வாரங்கள் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான காலமாக அமையும். மது அரக்கனின் ஆதிக்கத்தால் நடந்த குடும்ப வன்முறைகள் முடிவுக்கு வரக்கூடும். கரோனா உதவியாக தமிழ்நாடு அரசு வழங்கவுள்ள ரூ.2000 மதுக்கடைகள் வழியாக மீண்டும் அரசாங்கத்துக்கே செல்லாமல், ஏழைக் குடும்பங்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு பயன்படும். இவை அனைத்தும் மதுக்கடை மூடலின் மகிழ்ச்சிகள்.

மற்றொருபுறம் குடும்பத்தை மறந்து குடி, உடல்நலக்கேடு என சீரழிந்து கொண்டிருந்த பலர் ஊரடங்கின் பயனாக மதுவை மறந்து குடும்பத்தினருடனும், குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக பொழுதைக் கழிப்பர். இந்த மகிழ்ச்சி நிரந்தரமாக நீடிக்க வேண்டும் என்பது தான் ஒட்டுமொத்த தமிழகத்தின் விருப்பமாகும். இதற்கு ஒரே தீர்வு ஊரடங்குக்காக மூடப்பபடும் மதுக்கடைகள் மூடப்பட்டவையாகவே இருப்பது தான்.

நிரந்தரமாக மூடவேண்டும்

மதுக்கடைகள் மூடப்பட்டால் தமிழ்நாடு அரசின் வருமானம் போய்விடும் என்று கவலைப்படத் தேவை இல்லை. தமிழ்நாடு அரசின் இன்றைய ஆண்டு வருமானத்திற்கு இணையான தொகையை வரியில்லா வருவாய் ஆதாரங்களின் மூலம் ஈட்ட முடியும். தமிழ்நாட்டின் மனிதவளம் அதன் முழுத் திறனையும் வெளிப்படுத்தினால் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு குறைந்தபட்சம் 20% உயரும். தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை மதிப்பீட்டின்படி, 2020&21 ஆம் நிதியாண்டில் மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு ரூ. 20 லட்சத்து, 91,896 கோடி ஆகும். மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு, மனிதவளம் முழுமையாக பயன்படுத்தப்பட்டால், தமிழ்நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பு ரூ. 4 லட்சத்து 18,379 கோடி அதிகரிக்கும். இதிலிருந்து தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் வருவாய், மது வணிகத்தால் கிடைக்கும் வருவாயை விட அதிகமாக இருக்கும். எனவே வருவாய் இழப்பு குறித்த கவலை வேண்டாம்.

தமிழ்நாட்டில் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டால், தமிழகத்தின் முகமே மாறிவிடும். இளைய தலைமுறையினர் மது அரக்கனின் பிடியிலிருந்து மீள்வார்கள். மக்கள் நோயின்றி வாழ்வார்கள். இவ்வளவு நன்மைகளை வழங்கும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கு ஒற்றைக் கையெழுத்து போதுமானது. எனவே, எந்த வித தயக்கமும் இல்லாமல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் நிரந்தரமாக மூடுவதற்கு வசதியாக தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த அரசு ஆணையிட வேண்டும்" என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் மே.10 முதல் முழு ஊரடங்கு

ABOUT THE AUTHOR

...view details