சென்னை:அனைத்து மாவட்டங்களிளும் உள்ள மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் தலைமை அரசு மருத்துவமனையில் 50 லிருந்து 100 படுக்கைகள் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு என்று தனியாக ஒதுக்கி வைக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுகாதாரத்துறை செயலாளர், செந்தில்குமார் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில், 'தமிழ்நாட்டில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை என்பது தொடர்ச்சியாக அதிகரித்துக்கொண்டே வருகிறது. இது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஏற்கனவே ஆலோசனை நடத்தியிருக்கிறார். அதேபோல சுகாதாரத்துறை அமைச்சர் தொற்று அதிகமாக பாதிப்பு ஏற்பட்டு வரக்கூடிய சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்த நிலையில் கடந்த 17ஆம் தேதி முதல் சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 100-க்கும் மேலாக நாளொன்றுக்கு பாதிப்புகள் பதிவாகி வருகிறது. அதேபோல இரண்டு மாவட்டங்களில் 30-க்கும் மேலாக கரோனா பாதிப்புகளும், இரண்டு மாவட்டத்தில் 11 முதல் 20 பாதிப்புகளும், 23 மாவட்டங்களில் 1-10 பாதிப்புகளும், 9 மாவட்டங்களில் 0 என்ற அளவிலும் இருக்கிறது.
தொடர்ந்து தொற்று பாதிப்பு அதிகரித்து வரக்கூடிய சூழலில் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு இருக்கக்கூடியவர்கள் முறையாக வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்ற வேண்டும். லேசான அறிகுறிகளுடன் இருப்பவர்கள் ”பாராசிட்டாமல், ஜின்க், வைட்டமின் சி” உள்ளிட்ட மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அனைவரும் வீட்டில் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யும் கருவிகளை வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் அறிகுறிகளுடன் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பவர்களுக்கு தொலைபேசி மூலமாக அந்தந்த மாவட்டங்களில் இருக்கக்கூடிய மருத்துவப் பணியாளர்களைத் தொடர்பு கொள்ள வேண்டும்' என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.