சென்னை: திருவண்ணாமலை மாவட்டம் ஆர்த்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சரோஜா(80). மூதாட்டியான இவர் திருவண்ணாமலையில் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வருகிறார். மூதாட்டி சரோஜாவுக்கு முதியோர் உதவித்தொகை சென்னை அமைந்தகரையில் வழங்கி வருவதால் மாதம் ஒரு முறை சென்னைக்கு வந்து பெற்று செல்கிறார்.
வழக்கம் போல கடந்த 23 ஆம் தேதி மூதாட்டி சரோஜா முதியோர் உதவி தொகை பெற்ற சென்னை வந்துள்ளார். முதியோர் உதவி தொகை பெற்ற பின்பு, பேருந்துக்காக அமைந்தகரை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கிருஷ்ணா ஜுவல்லர்ஸ் அருகே அமர்ந்து கொண்டிருந்தார் மூதாட்டி சரோஜா.
அப்போது ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் மூதாட்டியிடம், மார்வாடி வீட்டில் குழந்தையை ஆசிர்வாதம் செய்தால் இலவசமாக புடவை தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதையடுத்து தானே ஆட்டோவில் அழைத்து செல்வதாக கூறி மூதாட்டியை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலை வரை அழைத்து சென்றுள்ளார்.
இதனை அடுத்து பணக்காரர்கள் போல தங்க நகைகள் அணிந்த படி இருந்தால் மார்வாடி புடவை தரமாட்டார்கள் எனக்கூறி உடலில் அணிந்துள்ள நகைகளை கழட்டி வைக்குமாறு கூறியுள்ளார். இதனை நம்பிய மூதாட்டி சரோஜா, தான் வைத்திருந்த பையில் நகைகளை கழட்டி வைத்துள்ளார்.
இதனை தொடர்ந்து உடனடியாக அந்த ஆட்டோ ஓட்டுனர் மூதாட்டி சரோஜாவிடம் இருந்த பையை தான் அருகிலுள்ள இடத்தில் பத்திரமாக வைத்துவிட்டு வருவதாகவும் தான் வரும்வரை அங்கேயே நிற்கும்படியும் கூறி பையை வாங்கிக்கொண்டு சென்றுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் ஆட்டோ ஓட்டுனர் வராததால் சந்தேகமடைந்த மூதாட்டி சரோஜா கீழ்ப்பாக்கம் போலீசாரிடம் 3 சவரன் நகை மற்றும் 44,000 பணத்தை ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் பறித்து சென்றுவிட்டதாக புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பழைய குற்றவாளியான சோழவரம் எடப்பாளையம் பகுதியை சேர்ந்த சுந்தர் கவனத்தை திசை திருப்பி மூதாட்டியிடம் பணம் மற்றும் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து கீழ்ப்பாக்கம் தனிப்படை போலீசார் சோழாவரத்தில் பதுங்கி இருந்த ஆட்டோ ஓட்டுனர் சுந்தரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சுந்தரம் மீது கவனத்தை திசை திருப்பி மூதாட்டியிடம் பணம் மற்றும் நகை பறித்த வழக்கு உட்பட ஐ.சி.எப், வியாசர்பாடி, தேனாம்பேட்டை உள்ளிட்ட காவல் நிலையங்களில் ஏற்கனவே 8 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் மூதாட்டியிடம் இருந்து பறித்து சென்றதில் 3 சவரன் தங்க நகைகள், 30 ஆயிரம் பணம் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் சுந்தர் பயண்படுத்திய ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்து சுந்தரை சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:குடியிருப்போர் நலச்சங்க சந்தா செலுத்தாத பெண் பேராசிரியைக்கு அடி; காவலாளி தாக்கும் வீடியோ வைரல்