தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

7.5% இடஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் நீட்டிப்பது குறித்து மறு ஆய்வு செய்யலாம்! - உயர் நீதிமன்றம் தள்ளுபடி

மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் நீட்டிப்பது குறித்து மறுஆய்வு செய்யலாம் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

7.5% இட ஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் நீட்டிப்பது குறித்து மறு ஆய்வு செய்யலாம்
7.5% இட ஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் நீட்டிப்பது குறித்து மறு ஆய்வு செய்யலாம்

By

Published : Oct 14, 2022, 10:01 PM IST

தனியார் தொழிற்சாலையில் இரவு காவலாளியாக இருப்பவரின் மகள் வர்ஷா, 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற அவர் மருத்துவப்படிப்பு ஆசையில் இருந்த நிலையில், மருத்துவப்படிப்பில் இடம் கிடைக்காததால், தனியார் தொண்டு நிறுவனத்தின் மூலம் துணை மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளார்.

கிரிட்டிகல் கேர் டெக்னாலஜி என்கிற என்ற படிப்பை படித்துக்கொண்டே இருமுறை நீட் தேர்வு எழுதி ஒரு முறை 210 மதிப்பெண்களும், மற்றொரு முறை 250 மதிப்பெண்களும் எடுத்திருந்தார்.

அரசு உதவி பெறும் பள்ளியில் படித்ததால், தமிழ்நாடு அரசின் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டின் கீழும் இடம் கிடைக்காத சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் 7.5% ஒதுக்கீட்டை தனியார் பள்ளிகளுக்கும் வழங்கி இருந்தால் தனக்கும் மருத்துவ இடம் கிடைத்திருக்கும் என்றும், தனியார் பள்ளியில் படித்தவர்களுக்கும் அமல்படுத்தக்கோரி தமிழ்நாடு அரசிடம் மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில் நடவடிக்கை எடுக்காத நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அரசிடம் அளித்த மனுவை பரிசீலித்து மருத்துவப்படிப்பில் தனக்கு ஒரு இடத்தை ஒதுக்க உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் அரசு பிளீடர் பி.முத்துக்குமார், அரசு கூடுதல் வழக்கறிஞர் ஸ்டாலின் அபிமன்யு ஆகியோர் ஆஜராகி, தனியார் பள்ளிகளுக்கும் 7.5% இட ஒதுக்கீடு வழங்க கோரிய மனுக்களையும், இட ஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்த வழக்குகளையும் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாகத் தெரிவித்தனர்.

இதன்பின்னர் நீதிபதி சுரேஷ்குமார் பிறப்பித்த உத்தரவில், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை இரு நீதிபதிகள் அமர்வு நிராகரித்த நிலையில், மீண்டும் அதே நிவாரணத்தைக் கோர முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

அதேசமயம், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அரசு தான் நிதி உதவி செய்கிறது என்பதாலும், அங்கு படிக்கும் மாணவர்களும் வசதியான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அல்ல என்றும், அவர்களின் பொருளாதார சமூக நிலை என்பது அரசுப்பள்ளி மாணவர்களைப்போன்று தான் உள்ளது என்றும் குறிப்பிட்ட நீதிபதி, 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் நீட்டிப்பது குறித்து அரசு மறு ஆய்வு செய்யலாம் என கருத்து தெரிவித்துள்ளார்.

இது முழுவதும் நீதிமன்றத்தின் கருத்தாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், இருந்தாலும் அரசின் கொள்கை முடிவுக்கு தொடர்புடையது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details