தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேதா இல்லத்தைப் பார்வையிட மக்களுக்கு அனுமதியில்லை என்ற உத்தரவு நீட்டிப்பு! - vedha house case

நினைவு இல்லமாக மாற்றப்பட்டுள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்ற உத்தரவை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Extended jayalalitha memorial houses order, MHC uphold
வேதா இல்லத்தைப் பார்வையிட மக்களுக்கு அனுமதியில்லை என்ற உத்தரவு நீட்டிப்பு!

By

Published : Feb 19, 2021, 6:45 PM IST

சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் போயஸ்தோட்ட இல்லத்தை கையகப்படுத்தியதை எதிர்த்தும் இழப்பீடு உத்தரவை எதிர்த்தும் தீபக், தீபா தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி சேஷசாயி, நினைவு இல்ல திறப்புவிழாவை நடத்திக்கொள்ளலாம் எனவும் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கக்கூடாது எனவும் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தார்.

மேலும், நினைவு இல்ல திறப்புவிழாவிற்கு பின்பு போயஸ்தோட்ட இல்லத்தின் சாவியை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளரிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டிருந்தார். இந்த இடைக்கால உத்தரவுகளை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, சாவியை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்தனர்.

நினைவு இல்லத்தின் சாவியை அரசே வைத்துக்கொள்ளவும், பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும் அரசுக்கு அனுமதியளித்து உத்தரவிட்ட நீதிபதிகள், பொதுமக்கள் பார்வைக்கு அனுமதி இல்லை என்ற உத்தரவு மட்டும் அப்படியே தொடரும் எனத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் தலைமை நீதிபதி அமர்வில் இன்று(பிப்ரவரி 19) விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், நிலம் கையகப்படுத்தியதை எதிர்த்து, இழப்பீடு தொகை வழங்கப்பட்டதை எதிர்த்து வெவ்வேறு வழக்குகள் வெவ்வேறு அமர்வுகளில் விசாரணையில் இருப்பதால், அவை அனைத்தையும் ஒன்றாக இணைத்து ஒரே வழக்காக விசாரிக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், தனி நீதிபதி முன்புள்ள வழக்கில் உரிய தீர்வை பெற்றுக்கொள்ளுமாறு இருதரப்புக்கும் அறிவுறுத்தி, தனி நீதிபதியின் இடைக்கால உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த அரசின் மேல்முறையீட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர். அதேநேரத்தில், தனி நீதிபதியின் இடைக்கால உத்தரவை எதிர்த்து அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு வழக்கின் மீது இந்த அமர்வு பிறப்பித்த உத்தரவுகள், தனி நீதிபதியிடம் உள்ள வழக்கின் விசாரணை முடியும்வரை தொடரும் என தெளிவுபடுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க:'ஜெ.நினைவிட திறப்பு நிகழ்வையும், சசிகலா விடுதலையையும் ஒரு சேர பார்க்க வேண்டியதில்லை' - கடம்பூர் செ.ராஜு

ABOUT THE AUTHOR

...view details