கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் பொதுப் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. தற்போது பொருளாதார தேவைகளைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு முழுவதும்பொதுப் போக்குவரத்து கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் இயக்கப்பட்டு வருகிறது.
மேலும், நாளை முதல் மாவட்டங்களுக்கு இடையேயும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதனைத்தொடர்ந்து, நீண்ட நாள்களுக்குப் பிறகு பேருந்துகள் நீண்ட தூரம் மற்றும் இரவு நேரங்களில் இயக்கப்பட உள்ளதால் அரசுப் பேருந்து ஓட்டுநர்களுக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக்கு கழகம் பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளது.
அதன்படி ”கடந்த ஐந்து மாதங்களாக இரவு நேரங்களில் ஓய்வில் இருந்ததால், இரவு நேரங்களில் பேருந்துகளை கவனத்துடன் இயக்க வேண்டும். மேலும் சாலைகளில் அதிக இருசக்கர வாகனங்கள் செல்வதாலும், நகரத்தில் போக்குவரத்து நெரிசல் காணப்படுவதாலும் பேருந்துகளை இயக்கும்போது அதிக கவனம் தேவை எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் பல்வேறு இடங்களில் தடுப்புகள் இருப்பதால் மிகக் கவனத்துடன் பேருந்துகளை இயக்க வேண்டும்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைத்து ஓட்டுநர்களுக்கும் நடத்துநர்களுக்கும் பணி தொடங்கும் முன் ஆலோசனையாக வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.