தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 26 ஆம் தேதி தொடங்கியது. அன்று முதல் கனமழை தொடர்பாகவும், அது குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது எச்சரிக்கை விடுத்து வருகிறது.
கடந்த நான்கு நாள்களாக தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்து வருகிறது. மேலும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் வெள்ளக்காடாக உள்ளன.
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு, மஞ்சள், ஆரஞ்ச் (Red Alert, Orange Alert, Yellow Allert) என்ற நிறங்களில் எச்சரிக்கை விடுத்து வருகிறது. இதன் விளக்கம் குறித்து காணலாம்.
'ரெட் அலர்ட்’ என்றால் என்ன..?(Red Alert)
வானிலை மிகவும் மோசமாக இருக்கும் என கணக்கிடப்படுவது ரெட் அலர்ட் என அறிவிக்கப்படுகிறது. மேலும் 24 மணி நேரத்தில் 20 செ.மீ-க்கு மேல் கனமழை பெய்யும் பட்சத்தில் ரெட் அலர்ட் விடுக்கப்படும். மக்களின் இயல்பு நிலை பாதிக்கும் வகையிலும், அடிப்படை தேவைகளை அடைய முடியாத நிலை ஏற்படும் வகையில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கும் என்பதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்படும்.
ரெட் அலர்ட் விடுக்கப்படும் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையை உடனடியாக தொடங்க வேண்டும். மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்பதை குறிக்கும். போக்குவரத்து, மின்சாரம், இணையம், மற்றும் தொலைத் தொடர்பு துண்டிக்கப்படும் வகையில் மழை பெய்யும். இந்திய வானிலை ஆய்வு மையம் விடுக்கும் மழை தொடர்பான எச்சரிக்கைகளிலேயே மிக அபாயகரமானது ரெட் அலர்ட் எனும் சிவப்பு எச்சரிக்கை ஆகும்.