சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. இதற்காக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கடந்த 27-ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர். மேலும் அதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் ஆளுநர் பேசவேண்டிய உரையை தயாரித்து ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஆளுநரிடம் சட்டப்பேரவையின் மரபுகள் குறித்தும், சட்டப்பேரவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அப்போது ஆளுநர் தனது உரையில் சிலவற்றை நீக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளதாக ராஜ்பவன் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் இன்று(09.01.2023) தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023ஆம் ஆண்டிற்கான உரையை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வாசித்தார். அப்போது சில வார்த்தைகளை நீக்கி விட்டு ஆங்கிலத்தில் தொடர்ந்து உரை நிகழ்த்தினார்.
அச்சிடப்பட்ட உரையில் சில வார்த்தைகளை ஆளுநர் படிக்கத் தவறியதால், ஆங்கிலத்தில் அச்சிடப்பட்ட உரையை சட்டப்பேரவையின் அவைக்குறிப்பில் பதிவிட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவை முடியும் முன்னர் தீர்மானம் கொண்டு வந்தார். இதனால், ஆளுநர் ஆர்.என்.ரவி முதலமைச்சர் தீர்மானத்தை வாசித்துக் கொண்டிருக்கும் போதே வெளியே சென்றார்.
இது குறித்து ஆளுநர் மாளிகை வட்டாரங்களில் கூறும்போது, "ஆளுநரின் உரையை நீக்குகிறேன் என்ற பெயரில் அவர் அழகாக தமிழில் மேற்கோள் காட்டிய ஔவையாரின் 'வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயர குடி உயரும், குடி உயர கோல் உயரும், கோல் உயரக் கோன் உயர்வான்' என்கிற வரிகளையும், பாரதியாரின் வாழிய பாரத மணித்திரு நாடு என்கிற கவிதை வரிகளையும், நாட்டு மக்களுக்கு ஆளுநர் தமிழில் சொன்ன ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகளையும் நீக்கியுள்ளனர்.
ஆளுநர் உரையை ஜனவரி 6 அன்று அரசு அனுப்பி வைத்தது. அதில் உள்ள ஆட்சேபகரமான விஷயங்களை குறிப்பிட்டு கேட்டு அவைகளை நீக்கச் சொல்லி சொன்னபோது அச்சுக்கு போய்விட்டது, நீங்கள் பேசும்போது தவிர்த்து பேசுங்கள் என்று சொல்லியுள்ளனர். (அந்த விவரமும் ஆவணபூர்வமாக பதிவாகியுள்ளது). ஆனால், ஆளுநர் சபையில் அதை நீக்கி வாசித்தபோது உடனடியாக ஊடகங்களுக்கு அதை அனுப்பி வைத்தும், ஆளுநர் இருக்கும்போதே ஆளுநர் உரைக்குப்பின் சபை முடித்து வைக்கப்பட வேண்டும் என்கிற சபை மரபை மீறி, தீர்மானம் கொண்டு வரப்பட்டு ஆளுநர் அவமானப்படுத்தப்பட்டுள்ளார்".
எதை எதை ஆளுநர் ஆட்சேபித்தார்? ஏன்?: ''ஜனவரி 12ஆம் தேதி சுவாமி விவேகானந்தரை நினைவுகூரும் தினம், இளைஞர் தினம். அந்த தினத்தைக் குறிப்பிட்டு சேர்த்து பேசியுள்ளார். இது அவை மரபை மீறிய செயல் அல்ல. ஆளுநர் ஆட்சேபித்த மற்றும் தவிர்க்கப்பட்ட பகுதிகள் அரசாங்கத்தைப் கண்டபடி பெரிதும் புகழ்ந்த பகுதிகள். நடைமுறை வேறாக இருந்ததால் ஆட்சேபித்தார். பேசும்போது தவிர்க்கலாம் என்று சொன்னதால் தவிர்த்தார்.
'வீரம் மற்றும் வீரியம் கொண்ட திராவிட மாடல் ஆட்சி தொடரும்' என்பதை இதை ஆளுநர் சொல்ல முடியாது. முதலமைச்சர் அவர் உரையில் பேச வேண்டியது. கொள்கைப்படி செய்ய வேண்டியதை மட்டும் ஆளுநர் உரையில் வைப்பார்கள். இதுபோன்ற அதீத புகழ்ச்சிகளை தவிர்ப்பேன் என்று ஆளுநர் சொல்லிவிட்டார்.