தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துவருகிறது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்று 4,885 ரூபாய்க்கும், சவரன் 39 ஆயிரத்து 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 232 ரூபாய் உயர்ந்துள்ளது.
கடந்த ஜனவரி 1ஆம் தேதி ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 37 ஆயிரத்து 880 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 39 ஆயிரத்து 80 ரூபாயாக உள்ளது. புத்தாண்டு தினத்திலிருந்து இன்றுவரை சவரனுக்கு 1,500 ரூபாய் வரை உயர்வு கண்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டு வரும் மாற்றங்கள் தங்கம் விலையில் எதிரொலித்து வருவதாக சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். இதுதொடர்பாக ஈடிவி பாரத் ஊடகத்திடம் பேசிய பங்குச் சந்தை நிபுணர் அருள் ராஜன், " தங்கம் விலை அன்றாடம் லேசான ஏற்ற இறக்கங்களை சந்தித்துவருகிறது. சந்தையில் மோசமான செய்திகள் வரும்போதெல்லாமல் தங்கம் விலை உயர்வு பெறுகிறது. பின் மீண்டும் பங்குச் சந்தை ஏற்றம் காணும்போதெல்லாம் அதன் விலை வீழ்ச்சி அடைகிறது.
பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை முதலீட்டாளர்கள் கருதுவதால் இதுபோன்ற சூழ்நிலை ஏற்படுகிறது. கடந்தாண்டு அதன் விலை உச்சத்திலிருந்து கீழே இறங்கியுள்ளது, இந்த ஆண்டு தங்கத்தின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது" என்றார்.
இதையும் படிங்க:103 கிலோ தங்கம் திருடப்பட்ட வழக்கு: அறிவியல்பூர்வமாக விசாரணை - சிபிசிஐடி டிஜிபி பிரதீப் வி.பிலீப்