சென்னை:நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கலந்து கொண்டுள்ளதால் சொத்துக்குவிப்பு வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து திமுக எம்.பி. ஆ.ராசாவிற்கு விலக்கு அளித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் அனுமதி உத்தரவிட்டுள்ளது. திமுகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா, வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்துள்ளதாக 2015ஆம் ஆண்டில் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில் ஆ.ராசா, அவரது உறவினர் பரமேஷ்குமார், நண்பர் கிருஷ்ணமூர்த்தி, கோவை ஷெல்டர்ஸ் ப்ரமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிட்டட், மங்கள் டெக் பார்க் லிமிட்டட், என்.ரமேஷ், விஜய் சடரங்கனி மற்றும் சில நிறுவனங்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி. எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.