சென்னை:நீட் தேர்வு விலக்கு தொடர்பான தமிழ்நாடு இளங்கலை மருத்துவப் பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கைச் சட்டம், 2021, தமிழ்நாடு சட்டப் பேரவையில் 2021ஆம் ஆண்டு செப்.13ஆம் தேதியன்று அனைத்து அரசியல் கட்சிகளாலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், 142 நாள்களுக்குப் பிறகு, ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்டது. அதன் பின்னர், தமிழ்நாடு சட்டப்பேரவையின் வரலாற்று சிறப்புமிக்கக் கூட்டத்தில், இந்த சட்டமுன்வடிவு மீண்டும் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.
2021-2022ஆம் கல்வி ஆண்டு முடிவுக்கு வந்து, 2022-2023ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைமுறை விரைவில் தொடங்கவுள்ள நிலையில், நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்டமுன்வடிவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு விரைந்து அனுப்பிட வேண்டும் என ஆளுநர் ஆர்.என். ரவியை நேரில் சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.