தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் இரண்டாம் அலையில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. லேசான மற்றும் மிதமான நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு சித்தா, யுனானி, ஆயுர்வேதா, இயற்கை, யோகா மருத்துவமுறைகளை மக்கள் நல்வாழ்வுத்துறை பயன்படுத்தி வருகிறது. இந்நிலையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு குறைவதால், கறுப்பு பூஞ்சை நோய் தாக்கத்திற்கு ஆளாகுகின்றனர். அதே போல, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவி பிடிப்பதால் நுரையீரலில் பூஞ்சை படிவதாகவும் கூறப்படுகிறது.
கறுப்பு பூஞ்சை நோய் பாதிப்பு
இதுபோன்ற நிலையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கறுப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்படாமல் தடுத்திட யோகா, இயற்கை மருத்துவ முறைகள் பெரும் பங்கு வகிக்கிறது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநர் கணேஷ் கூறுகையில், "தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சித்தா, ஆயுர்வேதா, யுனானி, யோகா, இயற்கை மருத்துவ முறை மூலம் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இதுவரை 62 இடங்களில் சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகிறது. ஏழாயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்கு சிகிச்சை பெறுபவர்கள் ஒரு வாரத்தில் குணமடைந்து வீட்டிற்குச் செல்வார்கள்" என்றார்.
யோகா, இயற்கை மருத்துவமுறை
இதுதொடர்பாக அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியின் மருத்துவர் தீபா கூறும்போது, "யோகா, இயற்கை மருத்துவ முறையை கரோனா பாதிப்புக்கு ஆரம்ப நிலையிலேயே பின்பற்றும்போது, ஆக்சிஜன் சிகிச்சை அளிக்காமலேயே குணப்படுத்த முடியும். நோயாளிகளுக்கு காலையில் வெறும் வயிற்றில் நீம்பால் எனப்படும் மருந்து அளிக்கப்படும். அதனைத் தொடர்ந்து யோகா பயிற்சி அளிக்கப்படும். பின்னர் நோயாளிகள் உப்பு கலந்த தண்ணீர் மூலம் வாய் கொப்பளிக்க செய்யப்படுவார்கள். தொடர்ந்து, அக்கு பிரசர், அக்குபஞ்சர் சிகிச்சையும், மருத்துவரின் கண்காணிப்பில் ஆவிப்பிடிக்கவும் செய்யப்படும்" எனத் தெரிவித்தார்.