சென்னை:கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில்நீர்வரத்து அதிகரிப்பால், அணையிலிருந்து ஆயிரத்து 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
அந்த வகையில், சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை தாக்கத்தின் எதிரொலியாக, குடிநீர் ஆதாரமாக விளங்கக் கூடிய செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. எனவே, ஏரியிலிருந்து ஆயிரம் கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டது.
இந்நிலையில், நேற்று (நவ.29) மதியம் இரண்டு மணி நேரம் பெய்த மழையின் காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22.35 அடியும், மொத்த கொள்ளளவு 3,210 மில்லியன் கன அடி, நீர்வரத்து 1,148 கன அடியாக இருந்தது. கனமழை காரணமாக ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் கூடுதலாக திறக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.
அதன்படி, ஏரியிலிருந்து திறக்கப்படும் உபரிநீர் மேலும் அதிகரிக்கப்பட்டு, தற்போது வினாடிக்கு 1,500 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும், ஆற்றின் கரையோரம் உள்ள தாழ்வானப் பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கையாக வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க:அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை - வானிலை மையம்! பள்ளிகளுக்கு விடுமுறை - முழு லிஸ்ட்!