பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் விடைத்தாள் நகல் அல்லது மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் வரும் 24ஆம் தேதி முதல் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து அரசு தேர்வு துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை 16ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் தேர்வு விடைத்தாள் நகல் அல்லது மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் வரும் 24ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியின் மூலமும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்தின் மூலமும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வரும் மாணவர்களிடம் ஒரு படிவம் அளித்து அவர்கள் எந்த பாடத்திற்கு விடைத்தாள் நகல் கேட்கிறார்கள், எந்த பாடத்திற்கு மறுகூட்டல் கேட்கிறார்கள் என்பதை பூர்த்தி செய்து வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். மாணவர்களிடம் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு உரிய கட்டணத்தை பணமாக பெற்றுக் கொள்ள வேண்டும்.
விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பிக்கும் மாணவர்கள் தற்போது மறுகூட்டல் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க கூடாது. விடைத்தாள் நகல் பெற்ற பின்னரே மதிப்பெண் மறு கூட்டலுக்கு அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும்.
விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் அரசு தேர்வுத் துறையின் அறிவிப்பைப் பார்த்து தெரிந்துக் கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் பள்ளிகள் தேர்வு மையங்களை அணுக வேண்டாம்.
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு உரிய மதிப்பெண் பட்டியலை வரும் 25-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்து தலைமை ஆசிரியர்கள் வழங்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.