சென்னை:தமிழ்நாடு அரசுப் பணியில் குரூப் 1 பணிக்கான முதன்மைத் தேர்வினை எழுதுவதற்கு தகுதி உள்ளவர்களுக்கான ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வலைதளத்தில் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 1 தேர்வு முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மூன்று கட்டங்களாக நடத்தப்படும்.
அந்த வகையில் கடந்த ஆண்டு முதல் நிலைத் தேர்வு முடிந்த நிலையில் தற்போது, மதிப்பெண் அடிப்படையில் சிலரே முதன்மைத் தேர்விற்கு தகுதி பெற்றுள்ளனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 1 பதவிகளில் அடங்கிய துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், உள்ளிட்ட 92 காலி பணியிடங்களுக்கான தேர்வை கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் தேதி நடத்தியது.
இதையும் படிங்க:'மாணவர்களை மற்ற மாணவர்களோடு ஒப்பிடாதீர்கள்' - அமைச்சர் அன்பில் மகேஷ் பெற்றோர்களுக்கு அறிவுரை!
கடந்த ஆண்டு நடந்து முடிந்த முதல் நிலைத் தேர்வினை மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதினர். இதன் முடிவுகள் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியிடப்பட்டது. முதல் நிலைத் தேர்வில் வெற்றி பெற்ற தேர்வர்கள் அவர்களது அசல் சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய மே மாதம் 8ஆம் தேதி முதல் மே மாதம் 16ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டது.
அடுத்தகட்டமாக தற்போது முதன்மைத் தேர்வு இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளதாக தேர்வாணையம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்வில், ஒரு பணியிடத்திற்கு சுமார் 20 பேர் வீதம் தேர்வு எழுதுவதற்கு அழைக்கப்பட்டு உள்ளனர். முதன்மைத் தேர்வு எழுதவுள்ள நபர்களின் சான்றிதழ்கள் சரி பார்க்கப்பட்டு பின்னர், தேர்வர்களின் ஆவணங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு ஸ்கேன் செய்து பதிவேற்றமும் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் அஜய்யாதவ் வெளியிட்டுள்ள தகவலில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்பட உள்ள விரித்துரைக்கும் வகையிலான முதன்மைத் தேர்வு, ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது.
தேர்வு எழுதுவதற்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் அனுமதிச்சீட்டுகள் தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in, www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன. தேர்வின் அனுமதிச்சீட்டுகளைப் பெற விண்ணப்பதாரர்கள் அவர்களின் விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றைப் பதிவு செய்து ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்” என அதில் தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க:பொறியியல் பொதுப்பிரிவு முதல் சுற்று கலந்தாய்வில் 16,516 இடங்கள் தேர்வு!