5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடைபெறும் தேதி அறிவிக்கப்படாமல் உள்ளது. மாதிரி கேள்வித்தாளும் வெளியிடப்படாமல் இருப்பதால் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். 5 , 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு விவகாரத்தைப் பொறுத்தவரை தற்போதுவரை குழப்பமான நிலையே நீடிக்கிறது. பொதுத்தேர்வு நடத்தப்படும் என அரசாணை வெளியிட்டாலும்கூட, இதுவரை தேர்வு அட்டவணை வெளியிடப்படவில்லை.
இதற்கிடையே தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் சேதுராம வர்மா, தேர்வு தொடர்பாக ஒரு அறிக்கையை ஏற்கனவே வெளியிட்டிருந்தார். அதில், ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய மூன்று பாடங்களில் மட்டும் அடிப்படை விஷயங்கள் குறித்து பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என ஐந்து பாடங்களிலும் பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் எனவும் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், திருச்சியில் நேற்று நடந்த விளையாட்டுப் போட்டிகள் விழாவில் பங்கேற்ற பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசுகையில், 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய மூன்று பாடங்களில் மட்டும் பொதுத்தேர்வு நடைபெறும் எனக் கூறியுள்ளார்.