தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

துணை நடிகை பாலியல் புகார்: முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்த அமைச்சர் - santhini

ex-minister-manikandan-file-petition-in-hc-to-seek-anticipatory-bail
துணை நடிகை பாலியல் புகார்: முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்த அமைச்சர்

By

Published : Jun 2, 2021, 3:07 PM IST

Updated : Jun 2, 2021, 4:20 PM IST

14:59 June 02

சென்னை:நடிகையை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். முந்தைய அதிமுக அரசில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் மணிகண்டன். இவருக்கு எதிராக கடந்த வாரம் துணை நடிகை சாந்தினி, காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்தார்.

அதில், அமைச்சர் மணிகண்டன், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறியதால் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒரே வீட்டில் கணவன் - மனைவியாக வாழ்ந்ததாகவும், அந்த காலகட்டத்தில் 3 முறை கருவுற்ற போது, தன்னை கட்டாயப்படுத்தி கருவைக் கலைக்கச் செய்ததாகக் கூறியுள்ளார்.

தற்போது, திருமணம் செய்ய மறுப்பதுடன், அவருடன் இருந்தபோது எடுத்த புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டுவதாகவும் அந்தப் புகாரில் கூறியுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் துன்புறுத்தல், பெண்ணின் அனுமதியின்றி கருக்கலைப்பு செய்தல், தாக்குதல், காயம் உண்டாக்குதல், ஏமாற்றுதல், பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் ஆகிய இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழும், தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவுகளின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், திருமணம் செய்து கொள்ள மறுத்ததாக கூறும் புகார்தாரர், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் இந்தப் புகாரை அளித்துள்ளதாகவும், தனக்கு எதிராக கூறும் குற்றச்சாட்டுக்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

தன்னிடம் பணம் பறிக்கும் நோக்கில் இந்தப் புகாரை அளித்துள்ளதாகவும், சமுதாயத்தில் பிரபலமானவர்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பலாக நடிகை செயல்பட்டு வருவதாகவும், மலேஷியாவில் இதுபோல பலரை மோசடி செய்துள்ளதாக புகார்கள் உள்ளன என்றும் மனுவில் தெரிவித்துள்ளார். நடிகையை கருக்கலைப்பு செய்யும்படி மிரட்டவில்லை என்றும், அவராகவே கருக்கலைப்பு செய்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.

சினிமா வாய்ப்பு இல்லாததாலும், பெற்றோரின் மருத்துவ சிகிச்சைக்காகவும் உதவி கேட்டதால் பரணி என்பவர் மூலம் 5 லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும், அதை பரணி திருப்பி கேட்டது முதல் தன்னை பிளாக்மெயில் செய்ய தொடங்கியதாகவும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மனுவில் தெரிவித்துள்ளார்.மேலும், நடிகை சாந்தினியை மிரட்டவில்லை என்றும், ஆரம்பகட்ட விசாரணை ஏதும் மேற்கொள்ளாமல், தனக்கு எதிராக அவசர அவசரமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மனுவில் கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:முன்னாள் அமைச்சர் மணிகண்டன் அரசுக்கு துரோகம் செய்தார் : சாந்தினி - மருத்துவர் தொலைபேசி உரையாடல்

Last Updated : Jun 2, 2021, 4:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details