சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
மீனவர்கள் மீது தாக்குதல்
அப்போது பேசிய அவர், ” திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மீனவர்கள் மீதான தாக்குதல் அதிகமாகி வருகிறது. கண் துடைப்புக்காக மீனவர்களுக்கு திமுக நிவாரணம் வழங்கி வருகிறது.
தேர்தல் நேரத்தில் என்னை யார் வேண்டுமானாலும் வந்து நேரில் சந்திக்கலாம் என ஸ்டாலின் தெரிவித்திருந்தார். ஆனால் முதலமைச்சரான பிறகு அவரை சந்திப்பதற்கு மீனவர்கள் தேதி கேட்டும் கூட இதுவரை மீனவர்கள் சங்கத்தினரை சந்திக்க அவரால் முடியவில்லை.
தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ்
சசிகலா, அவரை சேர்ந்தவர்களிடம் எந்த ஒரு தொடர்பும் அதிமுகவினர் வைத்துக்கொள்ளக்கூடாது என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு மீறி தொடர்பு வைத்துக்கொண்டவர்கள் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுத்து வருகிறது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தான் அமைச்சரவையில் வாய்ப்பு கொடுத்தார். ஆனால் சமூக வலைதளங்களில் சசிகலா தான் அமைச்சர் வாய்ப்பு கொடுத்தார் என்ற தவறான செய்தியை பரப்புகின்றனர். சசிகலாவை நீக்கக்கோரி் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தினார் என்பதை நினைவுப்படுத்த விரும்புகிறேன்.
மேலும், சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் முடிவு எடுப்பர்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க:அதிமுகவில் இணைகிறாரா சசிகலா? மதுரையில் ஓபிஎஸ் பேட்டி