சென்னை: இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவிலேயே நிர்வாகத் திறமையற்ற ஒரு மாநில அரசு உண்டு என்றால், அது தற்போது தமிழ்நாட்டில் உள்ள விடியா திமுக அரசாகும். தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் பாலாறும், தேனாறும் ஓடும் என்று படம் காட்டியவர்கள். கள்ளச் சாராயத்தைப் பாலாகவும், கஞ்சா உட்பட அனைத்து போதைப் பொருட்களை தேனாகவும் ஓடவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். கொலை, கொள்ளை, பள்ளி, கல்லூரி மாணவிகள் மீதான பாலியல் வன்புணர்வு, அவர்களின் சந்தேக மரணங்கள், கடந்த 15 மாத திமுக ஆட்சியில் நாள்தோறும் நடைபெற்று வருகிறது.
"ரோம் நகரம் பற்றி எரியும்போது, நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தது போல்", தமிழ்நாடு சீரழிந்து போன நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். நாட்டிலேயே சிறந்த முதலமைச்சர் இவர்தான் என்று கூலிக்கு மாரடிக்கும் ஜால்ராக்களை வைத்து கூவச்சொல்லி அதைக் கேட்டு புளங்காகிதம் அடைந்து மதிமயங்கி கிடக்கிறார். தற்போது நாட்டில் நடக்கும் அத்தனை அக்கிரமங்களையும் கண்டு கொதிப்படைந்துபோய் உள்ள மக்களை திசை திருப்ப அருணா ஜெகதீசன் கமிஷன் அறிக்கை வெளியீடு என்ற ஒரு நாடகத்தை ஸ்டாலின் அரங்கேற்றி இருக்கிறார்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி விசாரித்து அரசுக்கு அறிக்கை அளிக்க 2018ஆம் ஆண்டு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அரசுதான் ஆணையம் அமைத்தது. அதே நேரத்தில், இந்த சம்பவம் குறித்து சிபிஐயும் விசாரித்து வருகிறது. ஆணையத்தின் இறுதி அறிக்கை கடந்த மே மாதமே சீல் இடப்பட்ட உறையில் வைத்து ரகசிய அறிக்கையாக இந்த விடியா அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை 3,000 பக்கங்களைக் கொண்டது என்றும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் இந்த அறிக்கையில் என்ன பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்று யாருக்கும் தெரியாது. இந்த அரசும் இதுவரை வெளியிடவில்லை. ஆனால், அருணா ஜெகதீசன் அறிக்கையில் என்னென்ன உள்ளது என்பது பற்றி ஒரு ஆங்கில மாதம் இருமுறை (Front Line) ஏடு வெளியிட்டுள்ளது. இதை வைத்துக்கொண்டு ஊடகங்கள் தேவையற்ற விவாதங்களை கட்டமைத்து வருகின்றன.