சென்னை: ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான ஈவிகேஎஸ் இளங்கோவன், டெல்லி சென்று காங்கிரஸ் மேலிடத் தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் கடந்த 15ஆம் தேதி சென்னை திரும்பினார். அப்போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அன்றைக்கே சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன. அவரை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து கண்காணித்து வந்தனர்.
இதைத் தொடர்ந்து அவருக்கு இருதய பாதிப்பும், கொரோனா பாதிப்பும் இருப்பது உறுதி செய்யப்பட்டது. தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்ததால், ஈவிகேஎஸ் இளங்கோவனின் உடல்நலன் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரவின. இதையடுத்து கடந்த 22ஆம் தேதி தனியார் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டிருந்த அறிக்கையில், ஈவிகேஎஸ் இளங்கோவன் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து விட்டதாகவும், தற்போது இருதய பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்திருந்தது. தான் நலமுடன் இருப்பதாகவும், விரைவில் குணமடைந்து திரும்புவேன் என்றும் ஈவிகேஎஸ் இளங்கோவனும் தெரிவித்திருந்தார்.