சென்னை: லேசான நெஞ்சு வலியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது என மருத்துவ நிர்வாகத்தின் சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா, கடந்த ஜனவரி 4ஆம் தேதி உயிரிழந்தார். இதனால் காலியாக அறிவிக்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக - காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா உள்பட 77 பேர் இறுதி வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்த தேர்தல் முடிவில் திமுக - காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,10,156 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதனையடுத்து அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு 43,923 வாக்குகள் பெற்று 2ஆம் இடத்தை பிடித்தார். இதன் மூலம் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை விட 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார்.
வெற்றிபெற்றபிறகு, தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் பல்வேறு கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்தார், ஈவிகேஎஸ் இளங்கோவன். அந்த வகையில் கடந்த வாரம் டெல்லியில் தேசிய தலைவர்களை சந்தித்துவிட்டு, சென்னை திரும்பி உள்ளார். அப்போது சென்னைக்கு திரும்பியதும் அவருக்கு மூச்சுத்திணறல் மற்றும் லேசான நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, சென்னை - போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இவரை காங்கிரஸ் கட்சி மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தொடர்ந்து மருத்துவமனைக்குச் சென்று நலம் விசாரித்து வருகின்றனர். இதுமட்டுமின்றி மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் சென்று ஈவிகேஎஸ் இளங்கோவனின் உடல் நலத்தை விசாரித்தார். அதுமட்டுமின்றி அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்தும் மருத்துவரிடம் கேட்டறிந்தார்.
அவருடைய உடல் நலம் நல்ல முன்னேற்றத்தில் இருந்தது. அவசர சிகிச்சை வார்டிலிருந்து சாதாரண சிகிச்சை வார்டுக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு லேசான கரோனா தொற்று உறுதியாகியுள்ளது என மருத்துவமனை சார்பில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
இதைத்தொடர்ந்து இளங்கோவனின் உடல் நிலையைப் பற்றி மருத்துவமனையில் இருந்து வந்த அறிக்கையில்,
" ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த 15ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவருக்கு லேசான கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் அவரை அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறோம். அவர் நன்றாக குணமாகி வருகிறார்" எனக் குறிப்பிட்டுள்ளது.
'சோதனைமேல் சோதனை' - சிகிச்சையில் இருக்கும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கரோனா - தற்போதைய நிலை என்ன? - ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கரோனா
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
!['சோதனைமேல் சோதனை' - சிகிச்சையில் இருக்கும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கரோனா - தற்போதைய நிலை என்ன? Evks elangovan](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-18041485-thumbnail-4x3-r.jpg)
Evks elangovan