சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் விருப்ப மனுக்கள் அளித்தோரிடம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமைக் கழகத்தில் அதற்கான நேர்காணல் நேற்று (மார்ச்4) நடைபெற்றது.
அந்த நேர்காணலை அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்களான துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி. முனுசாமி, வைத்திலிங்கம், பாடநூல் வாரியத் தலைவர் பா. வளர்மதி, டாக்டர் தமிழ்மகன் உசேன், வேணுகோபால் ஆகியோர் இணைந்து நடத்தினர்.
அப்போது பேசிய அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், “2011ஆம் ஆண்டில் சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் ஜெ. ஜெயலலிதா மகத்தான வெற்றி பெற்று, இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்கள் பின்பற்றக்கூடிய தலைசிறந்த முதலமைச்சராக நிருபித்துகாட்டி ஆட்சி நடத்தினார். அதனால் ஆளும் கட்சியே மீண்டும் ஆளும் நிலையை உருவாக்கினார்.
அவரது மறைவுக்கு பின்னால் கடந்த 4 ஆண்டுக் காலம் ஜெ. ஜெயலலிதா செய்த சாதனைகள், சாதித்த திட்டங்கள், அவற்றில் எந்தவித சேதாரமும், தொய்வும் இல்லாமல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடத்தி வருகிறார். நமக்கு ஒரு சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்தத் தேர்தலிலும், நமது ஆட்சி குறித்து எந்தவொரு குறையும் சொல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இங்கு விருப்ப மனு அளித்துள்ள அனைவருக்கும் தேர்தலில் போட்டியிடத் தகுதி உள்ளது. ஆனால், தொகுதிக்கு ஒருவர் தான் போட்டியிட முடியும். எனவே வாய்ப்பு வழங்கப்படாதவர்களுக்குத் தகுதி இல்லை என்ற அர்த்தம் இல்லை.