சென்னை:ஜி20 நாடுகளின் சார்பில் இன்று நடைபெற்ற சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை நிலைத்தன்மை அமைச்சர்கள் கூட்டத்தைத் தொடங்கி வைத்த மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சர் பூபேந்தர் யாதவ் பேசும்போது, "சென்னை ஒரு நகரம் அல்ல, ஒரு உணர்வு. இந்தியாவே பெருமிதம் கொள்ளும் நகரம், சென்னை.
அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. திறமை, வண்ணம், படைப்பாற்றல் மற்றும் வரலாறு ஆகியவற்றில் முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். வரலாறு தவிர, சுவையான உணவு, இசை, நடனம் மற்றும் திரைப்படம் ஆகியவற்றில் சென்னை சிறந்து விளங்குகிறது. இப்போது நீங்கள் இருக்கும் நகரம் கல்வி, மருத்துவம், கனரக பொறியியல், வாகனங்கள், தோல் பொருட்கள் மற்றும் மென்பொருள்கள் ஆகியவற்றின் மையமாகத் திகழ்கிறது.
சென்னை, பழமையையும் புதுமையையும் இலகுவாக இணைப்பதோடு, வாழ்வு ஆற்றல் மற்றும் வாய்ப்புகளுக்கு வலிமையும் சேர்க்கிறது. முதல் நகர்ப்புற மாநகராட்சி உருவானது இங்கு தான். சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு தமிழ்நாடு, ஒரு பெரிய கடல் சாம்ராஜ்யத்தை ஆட்சி செய்து, சுற்றுச்சூழல் மற்றும் தட்பவெப்ப நிலைகளுக்கு ஏற்ப திட்டமிட்ட வளர்ச்சியில் கோலோச்சிய சோழ மன்னர்களின் நிலமாகும்.
ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, மனிதனால் உருவாக்கப்பட்ட குளங்கள் மற்றும் அணைக்கட்டுகள், நீரோட்டத்தை சேமிக்கவும், ஒழுங்குபடுத்தவும் இன்னும் பயன்பாட்டில் உள்ளன. இம்மாநிலத்தின் தாவரங்கள், விலங்கினங்கள் மற்றும் வளமான கடலோர மற்றும் கடல்சார் வளங்கள், நிலையான வளர்ச்சி அணுகுமுறைகளுக்குச் சான்றாக உள்ளது.
சுற்றுச்சூழல் சவால்களைச் சமாளிப்பதற்கும், பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கும், உலகளாவிய முயற்சிகளை ஒன்றிணைந்து வழிநடத்துவதற்கான மகத்தான பொறுப்பை நாம் பகிர்ந்து கொள்கிறோம். பிரதமர் நரேந்திர மோடி எழுச்சியூட்டும் உரைக்கும், நிலையான உலகத்திற்கான தொலைநோக்குப் பார்வைக்கும் நான் நன்றி கூறுகிறேன்.
நமது 20 நாடுகளின் குழு, வளர்ச்சியின் பல்வேறு நிலைகளில் உள்ள நாடுகளை உள்ளடக்கியுள்ளது. இதனால் நமது வளர்ச்சி முன்னுரிமைகள் மற்றும் இலக்குகள் வேறுபடலாம். இருப்பினும், இந்த பூமி மீதான நமது பொதுவான அக்கறையால் நாம் ஒன்றிணைந்துள்ளோம். மேலும் தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினருக்காக அதைப் பாதுகாக்கும் பொறுப்பையும் நாம் பகிர்ந்து கொள்கிறோம்.
எல்லாவற்றிற்கும் மேலாக, நாம் அனைவரும் ஒரே உலகம், ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற கூற்றுக்கு இணங்க அனைத்து வேறுபாடுகளையும் கடந்து, நிலையான மற்றும் நெகிழ்தன்மை வாய்ந்த உலகின் பொதுவான பார்வைக்காக நாம் தொடர்ந்து ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
2022ஆம் ஆண்டில் இந்தோனேசிய பருவநிலை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் கூட்டத்தில், வளங்களின் சமமான பகிர்வுடன் பணிகள், வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மையை ஒருங்கிணைக்கும் அணுகுமுறையின் முக்கியத்துவத்தை நாம் உறுதிப்படுத்தினோம். இப்போது, முக்கியத்துவம் வாய்ந்த பருவநிலை மற்றும் சுற்றுச்சூழல் சவால்கள் மற்றும் அவற்றைச் சமாளிப்பதில் உலகளாவிய முயற்சிகளை எவ்வாறு வழிநடத்தலாம் என்பது குறித்த நாம் அனைவரின் ஒருங்கிணைந்த புரிதலை மேலும் வலுப்படுத்த வேண்டும்.