சென்னை: பனையூரில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் என்ற பெயரில் இசை நிகழ்ச்சி (Live In Concert) நிகழ்வு நேற்று (செப். 11) இரவு 7 மணிக்கு துவங்கி 11 மணி வரை நடைபெற்றது. இந்த நிகழ்வை தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த நிலையில், அதற்காக அரங்கு அமைக்கப்பட்டு சில்வர், கோல்டு, பிளாட்டினம், என்று பல விலைகளில் பிரத்யேக டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டன.
பல ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி வந்த ரசிகர்கள் நிகழ்ச்சியை பார்க்க முடியாமல் அவதியடைந்தனர். நிகழ்ச்சிக்காக 20 ஆயிரம் இருக்கைகள் தயார் செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்பனை செய்ததாக சொல்லப்படுகிறது.
அதனால் நிகழ்ச்சிக்கு உள்ளே செல்வோர் செல்ல முடியாமலும், டிக்கெட்டுக்கு ஏற்ற இடத்தில் அமர வைக்கப்படாமல் எங்கு வேண்டுமானலும் அமரும் நிலையிலும், சிலருக்கு இருக்கை இல்லாத நிலையும் இருந்தது. ஒரு சிலர் கூட்டத்தில் தங்கள் குழந்தைகளை தவறவிட்டு அவதியடைந்தனர். சிலர் டிக்கெட் வாங்கிவிட்டு பார்க்க முடியாமல் திரும்பி சென்று விட்டனர்.
மொத்தத்தில் எவ்வித பாதுகாப்பு அம்சங்களும், இருக்கைகளும் இல்லாத மோசமான நிலை இருந்ததாக ரசிகர்கள் கொந்தளித்தனர். டிக்கெட் வாங்கியும் ஆயிரக்கணக்கானோர் இசை நிகழ்ச்சியை பார்க்க முடியாத அளவுக்கு நிகழ்ச்சி ஏற்பாடு மோசமாக இருந்ததாக சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இசையை ரசிக்க வந்த ரசிகர்கள் மிக மோசமான அனுபவத்தை பெற்றதாக சமூக வலைதளங்களில் விரக்தியை பகிர்ந்து உள்ளனர். மேலும் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியால் சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் 2 மணி நேரத்திற்கும் மேலாக பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
இந்த நிலையில் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு ஏற்பட்ட இடையூறுக்கு மனிப்பு கோருவதாக நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்கள் X தளத்தில் பதிவிட்டுள்ளனர். அதில் திட்டமிட்டதை விட அதிகமானோர் குவிந்ததால் குழப்பம் ஏற்பட்டதாகவும், இசை நிகழ்ச்சியை காண வந்த ரசிகர்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு முழு பொறுப்பையும் ஏற்பதாகவும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏ ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி மேலும் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது தாம்பரம் மாநகர காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து தாம்பரம் மாநகர காவல்துறை அதிகாரி கூறியதாவது, "ஏ.ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலுக்கு விழா ஏற்பாட்டாளர்களே முழுக் காரணம், கார் பார்கிங் உள்ளிட்ட வசதிகளை விழா ஏற்பாட்டாளர்கள் முறையாக செய்யவில்லை.
இதன் காரணமாகவே நேற்று (செப். 10) இரவு ஓஎம்ஆர் சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகன ஓட்டுநர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் முதலமைச்சரின் வாகனமும் இதனால் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. வாகன போக்குவரத்து நெரிசல், குளறுபடிகள் உள்ளிட்ட காரணங்கள் குறித்து விசாரணை நடத்தப்படும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ‘தலைவர்171’.. சன் பிக்சர்ஸ் அதிகார அறிவிப்பு