சென்னை: நடிகர் பிரஜன் நடிப்பில் உருவாகியுள்ள D3 படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை தி நகரில் உள்ள தனியார் திரையரங்கில் நடைபெற்றது. இதில் இயக்குநர் மோகன் ஜி, நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
இவ்விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பேசுகையில், நியாபகம் வந்ததடா அந்த நாள் நியாபகம் வந்தது. உங்களை எல்லாம் பார்க்கும் போது சென்னை 600028 படத்தின் பாடல் தான் நியாபகம் வருகிறது என பாடல் பாடி காட்டினார். ரொம்ப நாள் ஆகிறது இது போன்று நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு என்றார். அப்பாவின் கடைமை என்று தான் நான் அரசியலுக்கு வந்தேன். கடமையாக மட்டும் இல்லாமல் சேவையாகவும் செய்து வருகிறேன் என தெரிவித்தார். வியாபாரம் மற்றும் அரசியல் என இரண்டிலும் மேலும் மேலும் வளர வேண்டும் என தொடர்ந்து பயணித்து கொண்டு இருக்கிறேன் என கூறினார்.
இதையடுத்து இயக்குநர் மோகன் ஜி பேசுகையில், சமூக பிரச்சனைகள் சார்ந்து படம் எடுத்தால் தான் வியாபாரம் ஆகிறது. நட்சத்திர நடிகர்கள் சுமாரான படம் எடுத்தால் கூட எளிதாக வியாபாரம் ஆகிவிடுகிறது. சாதாரண படம் எடுப்பவர்களுக்கு எளிதில் ஓடிடி வியாபாரம் கிடைப்பதில்லை. இன்னும் ஒரு 4 படம் சினிமாவில் செய்வேன் என்று நினைக்கிறேன். பகாசூரன் படன் ரிலீஸ் ஆகும் போது 80 சதவீதம் திரையங்குகள் நிரம்பி விடும். யாரும் பண்ண முடியாத படம் பகாசூரன் என்றார்.