தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

”ஸ்டாலினை குறைகூறும் காமராஜ்தான் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் கோட்டையில் அமர்ந்திருக்கிறார்” - எ.வ.வேலு பதிலடி!

வேளாண் சட்டங்களை ஆதரித்து விவசாயிகளுக்கு துரோகம் செய்தது குறித்து பேசாமல், ஸ்டாலினின் ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டுகளை பொய் எனத் திரித்து அறிக்கை விடுவதை அமைச்சர் காமராஜ் நிறுத்திக் கொள்ள வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினர் எ.வ.வேலு சாடியுள்ளார்.

எ.வ.வேலு ஸ்டாலின்
எ.வ.வேலு ஸ்டாலின்

By

Published : Oct 16, 2020, 11:23 AM IST

Updated : Oct 16, 2020, 12:55 PM IST

நெல் கொள்முதல் நிலையங்கள் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் நேற்றைய தினம் (அக்.15) அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து, ஸ்டாலினின் அறிக்கை அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு என்றும், உண்மைக்குப் புறம்பானது என்றும் தெரிவித்து, அவரைக் கண்டித்து உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மற்றொரு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், அமைச்சர் காமராஜைக் கண்டித்து முன்னாள் அமைச்சரும் திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலருமான சட்டப்பேரவை உறுப்பினர் எ.வ.வேலு அறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது :

”காவிரி டெல்டா பகுதிகள் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் உரிய காலத்தில், அதாவது அக்டோபர் ஒன்றாம் தேதியே நேரடி கொள்முதல் நிலையங்களை அரசு திறக்கவில்லை என்று ஸ்டாலின் குறிப்பிட்டிருப்பது அக்மார்க் உண்மை. விவசாயிகளை நேரடியாகச் சந்தித்தால் அமைச்சர் காமராஜின் முகத்திற்கு எதிரே அதை அவர்கள் சொல்வார்கள்.

ஏன், அமைச்சரேகூட தனது அறிக்கையில் “கடந்த பருவத்தில் 2,153 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. ஆனால் நேற்று வரை 816 நேரடி கொள்முதல் நிலையங்கள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன” என்று கூறியிருக்கிறார். அப்படியென்றால் போதிய நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டில் எங்கேயிருந்து அரசியல் காழ்ப்புணர்ச்சி வந்தது?

அதேபோல் ஒரு நேரடி கொள்முதல் நிலையத்தில் 1000 மூட்டைகள் நெல்லுக்கு மேல் கொள்முதல் செய்வதில்லை என்றும் ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார். அதையும் அமைச்சர் தனது அறிக்கையில் ஏற்றுக் கொண்டிருக்கிறார். நேரடி கொள்முதல் நிலையங்கள் போதிய எண்ணிக்கையில் திறக்கப்படவில்லை என்பதையும், நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள உச்சவரம்பு என்ற திமுக தலைவர் ஸ்டாலினின் குற்றச்சாட்டையும் ஏற்றுக் கொண்டுவிட்டு, அமைச்சர் பிதற்றுவது ஏன்?

ஸ்டாலினின் குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது என்று கூறும் அமைச்சர்தான் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் கோட்டையில் அமர்ந்திருக்கிறார்.

நேற்றைய தினம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நெல் கொள்முதல் குறித்து சூர்யப்பிரகாசம் என்பவர் ஒரு வழக்கு தொடர்ந்திருக்கிறார். அதில், “அரசின் கொள்முதல் நிலையங்களில், நெல் கொள்முதலுக்காக டெல்டா மாவட்டங்களில் 10 முதல் 15 நாள்கள் காத்திருக்க வேண்டியிருக்கிறது. அதனால் மழையில் நெல் மூட்டைகள் ஈரமாகி சேதமடைகின்றன. ஆகவே தமிழ்நாடு முழுவதும் அனைத்துப் பகுதிகளிலும் தேவையான அளவுக்கு நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.

ஸ்டாலினுக்கு அறிக்கை விடும் அமைச்சர், இப்படியொரு வழக்கு தொடரப்பட்டிருப்பதை முதலில் தெரிந்து கொண்டாரா இல்லையா?

அந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள், “விவசாயிகள் விளைபொருள்களை உரிய நேரத்தில் விற்பனை செய்ய முடியாமல் சாலைகளிலேயே நாள் கணக்கில் காத்துக் கிடக்கின்றனர். பல விவசாயிகள் வறுமை தாங்காமல் தற்கொலை செய்து கொள்ளும் நிலையும் உள்ளது. அரசு அலுவலர்கள் ஒரு மூட்டை நெல்லுக்கு 40 ரூபாய் லஞ்சமாகத் தராத விவசாயியிடம் நெல் கொள்முதல் செய்வதில்லையாம். அரசு அலுவலர்கள் சம்பளத்தைத் தாண்டி லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்குச் சமம்” என்று கடுமையாகக் கண்டித்திருக்கிறார்களே? அதாவது அமைச்சர் காமராஜுக்குத் தெரியுமா?

எனவே, கள நிலவரமே தெரியாமல் காவிரி டெல்டாவில் உள்ள ஒரு நபர், அமைச்சராகி விட்டோம் என்பதற்காக திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ’பதில் அறிக்கை’ என்ற பெயரில் பொய்யையும் புரட்டையும் வெளியிட்டு விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளைக் கொச்சைப்படுத்துவது மகா கேவலமான போக்கு.

ஸ்டாலின் ஆதாரமின்றி எந்தக் குற்றச்சாட்டையும் சொல்லமாட்டார் என்பதற்கு நெல் கொள்முதல் குறித்து உயர் நீதிமன்றம் விடுத்துள்ள கண்டனமும், அமைச்சர் அறிக்கையில் ஒப்புக்கொண்டுள்ள உண்மைகளுமே அத்தாட்சியாக இருக்கின்றன.

தன் துறையில் ஊழல் மழையில் அமைச்சர் காமராஜ் நனைவதால் அந்த மகிழ்ச்சி அவருக்குக் கிடைத்திருக்கலாம். ஆனால், தனது சுகத்தை நினைத்துக் கொண்டு விவசாயிகளின் துயரத்தை அவர் அவமானப்படுத்தக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.

தங்கள் நெல்லை விற்க முடியாமல், விற்ற நெல்லுக்கும் உரிய விலையும் கிடைக்காமல் விவசாயிகள் தடுமாறுகிறார்கள். தாங்க முடியாத துயரத் தீயில் சிக்கித் துடிக்கிறார்கள். கடந்த அக்டோபர் 12ஆம் தேதி, டெல்டா மாவட்டமான திருவாரூருக்கு நான் சென்றிருந்தபோது விவசாயிகள் படும் துயரை கண்கூடாகப் பார்க்க நேர்ந்தது. அந்த விவசாயிகளின் மனதைப் புண்படுத்தும் விதத்தில் “விவசாயிகள் எல்லாம் மகிழ்ச்சியுடனும் மன நிறைவுடனும் இருக்கிறார்கள்” என்று கோயபல்ஸ் பிரச்சாரத்தில் அமைச்சர் காமராஜ் தயவு செய்து ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அமைச்சராக இருக்கும் நீங்கள் பொறுப்புடன் பதில் சொல்லக் கற்றுக் கொள்ளுங்கள். பிரதான எதிர்கட்சித் தலைவர் கூறும் குற்றச்சாட்டிற்கு பரிகாரம் தேட முயற்சி செய்யுங்கள். விவசாயிகள் தங்கள் நெல்லுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையாக குவிண்டாலுக்கு மூன்றாயிரம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

ஆனால், அதுகுறித்து வாய் திறக்காமல், மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்து விவசாயிகளுக்குத் துரோகம் செய்தது குறித்தும் பதில் பேசாமல், ஸ்டாலினின் ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டுகளை பொய் எனத் திரித்து அறிக்கை விடுவதை அமைச்சர் காமராஜ் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க :'வாருங்கள் உடன்பிறப்புகளே, நம் பணிகளை இன்றே தொடங்குவோம்' -ஓபிஎஸ், இபிஎஸ் மடல்!

Last Updated : Oct 16, 2020, 12:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details