புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர்: கூடுதல் பொறுப்பை ஏற்கிறார் தமிழிசை
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இன்று கூடுதல் பொறுப்பாக ஏற்றுக்கொள்கிறார். காலை 9 மணிக்கு புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் பதவியேற்றுக் கொள்கிறார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்துவைப்பதாக புதுச்சேரி ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத் தேர்தல் அலுவலர்களுடன் தலைமைத் தேர்தல் அலுவலர் ஆலோசனை
தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக இன்று (பிப். 18) மாலை அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு ஆலோசனை நடத்துகிறார். காணொலி வாயிலாக இன்று மாலை 4 மணிக்கு ஆலோசனை நடத்தவுள்ளார்.
இந்தியாவின் மிக நீளமான 18 கிலோமீட்டர் பாலம்
இந்தியாவின் மிக நீளமான 18 கிலோமீட்டர் ஆற்றுப்பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப். 18) காணொலி வாயிலாகத் திறந்துவைக்கிறார். அஸ்ஸாமில் துப்ரி-புல்புரி இடையே பிரம்மபுத்திரா ஆற்றின் மீது நான்காயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாலம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இளம் வயது சாதனை வீராங்கனை மனு பாக்கர்
இளம் வயது சாதனை வீராங்கனை மனு பாக்கர் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டியில் மிக இளம் வயதில் (16) தங்கப்பதக்கம் வென்று சாதனைப் படைத்த மனு பாக்கரின் பிறந்தநாள் இன்று. பயிற்சியாளர் இல்லாதபோதும், 2017ஆம் ஆண்டு நடந்த ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார் மனு பாக்கர்.
சென்னையில் இன்று சர்வதேச திரைப்பட விழா
சென்னை சர்வதேச திரைப்பட விழா சென்னையில் 18ஆவது சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்குகிறது. எட்டு நாள்கள் நடைபெறும் இந்தப் பட விழாவில் 53 நாடுகளிலிருந்து 91 படங்கள் திரையிடப்பட உள்ளன. இந்நிகழ்ச்சியில் பத்து இந்திய மொழிகள் உள்பட 37 மொழிப்படங்கள் திரையிடப்படுகின்றன.
இன்று ஐபிஎல் ஏலம்
ஐபிஎல் டி-20 தொடரின் 14ஆவது சீசன் வரும் ஏப்ரல் மாதம் நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் இன்று (பிப். 18) பிற்பகல் 3 மணிக்குத் தொடங்குகிறது. ஏலத்துக்கான இறுதிப் பட்டியலில் 164 இந்திய வீரர்கள் 125 வெளிநாட்டு வீரர்கள், உறுப்பு நாடுகளைச் சேர்ந்த 3 வீரர்கள் என மொத்தம் 292 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் 61 வீரர்களை எட்டு அணிகள் ஏலம் எடுக்கிறது.