தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசியல் இல்லாமல் எழுத்தும் கலையும் இல்லை: எழுத்தாளர் இமையம் உடன் சிறப்பு நேர்காணல்!

எழுதுவதே ஒரு அரசியல் செயல்பாடுதான். எனவே அரசியல் இல்லாமல் எழுத்தும் கலையும் இல்லை என எழுத்தாளர் இமையம் தெரிவித்துள்ளார்.

அரசியல் இல்லாமல் எழுத்தும் கலையும் இல்லை - எழுத்தாளர் இமையம் உடன் சிறப்பு நேர்காணல்!
அரசியல் இல்லாமல் எழுத்தும் கலையும் இல்லை - எழுத்தாளர் இமையம் உடன் சிறப்பு நேர்காணல்!

By

Published : Dec 15, 2022, 2:52 PM IST

Updated : Dec 15, 2022, 6:11 PM IST

எழுத்தாளர் இமையம் உடன் சிறப்பு நேர்காணல்

சென்னை: தமிழ் எழுத்துலகில் அதிர்வலைகளை ஏற்படுத்திய கோவேறு கழுதைகள் மூலம் பள்ளி ஆசிரியரான இமையம், தமிழ் படைப்புலகில் முக்கிய ஆளுமையாகத் திகழ்ந்து வருகிறார். அவரது சாகித்ய அகாடமி விருது பெற்ற ‘செல்லாத பணம்’ என்ற நாவலை, திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் திரைப்படமாக எடுக்க உள்ளார்.

திருச்சி ஈவெரா கல்லூரியில் இளங்கலை படித்த காலத்தில், கவிதையில்தான் அவரது ஆர்வமும் ஈடுபாடும் இருந்தது. கலை இலக்கிய தளத்தில் இடதுசாரிகள் ஆதிக்கம் செலுத்திய 80களில், நாடக, இலக்கிய கூட்டங்களில், சினிமா திரை விழாக்களில், ஈழப் போராட்ட ஆதரவு கூட்டங்களில் பங்கேற்றதன் வாயிலாக, அரசியல் உரையாடலுடன் ரஷ்ய மற்றும் மேற்கத்திய இலக்கிய வாசிப்பில் மனம் லயித்தது. அவரது கவிதைகளில் இளம் பருவத்திற்கே உரிய புரட்சி மீதான ஈர்ப்பு அவருக்கு இருந்தது.

“புரட்சியை நீ பார்த்தாயா? உனக்குத் தெரியாததை எழுதுவதை விட, உனக்குத் தெரிந்ததை எழுது. உன்னைப் பற்றி, உன் ஊரைப் பற்றி, உன் தெருவைப் பற்றி எழுது. கிழவனும் கடலும் (Old Man and the Sea) என்ற ஹெம்மிங்வேயின் நாவலைக் கொடுத்து படிக்கச் சொல்லி, என்னைச் செதுக்கியது மறைந்த பேராசிரியர் ஆல்பர்ட்,” என்று நினைவு கூறி ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்திகளுக்காக நேர்காணலைத் தொடங்கினார், எழுத்தாளர் இமையம்.

கேள்வி 1 - கோவேறு கழுதைகள் நாவலுக்கே சாகித்ய அகாடமி விருது கிடைத்திருக்க வேண்டும் என்ற வருத்தம் உண்டா?

கோவேறு கழுதைகள் 1994ல் வெளியானபோது அதற்கு விருது தர வேண்டும் என்று சில எழுத்தாளர்கள் தெரிவித்தபோதுதான் சாகித்ய அகாடமி என்ற ஒன்று இருப்பதே எனக்குத் தெரிய வந்தது. தமிழ் எழுத்துலகில் கடந்த நூறாண்டுக் கால வளர்ச்சியில் இந்த நாவலுக்கு இணையானது வேறொன்றும் இல்லை என்று சுந்தர ராமசாமி புகழ்ந்து கூறினார். ஆனால் ஒடுக்கப்பட்ட மக்களின் இழிவை முன்னிறுத்துவதால், மேல் சாதியினர் கொண்டாடுவதாக சில தலித் எழுத்தாளர்கள் வசைபாடினர். நான் மக்களுக்காக எழுதுகிறேன், சமூக-அரசியல் அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்குகிறேன்.

கேள்வி 2 - வட்டார இலக்கியம், கறுப்பர் இலக்கியம்போல தலித் இலக்கியம் இருப்பதில் என்ன தவறு?

நான் தொல்காப்பியரின் பேரன் என்று சொன்னால் நீங்கள் என்ன சொல்வீர்கள்? பார்ப்பன இலக்கியம், பிள்ளைமார் இலக்கியம், கொங்கு இலக்கியம் என்று வகைப்பாடு இல்லாதபோது, இது சாதிய பார்வையிலிருந்து வருவது ஏற்புடையதல்ல. நீண்ட நெடிய தமிழ் இலக்கிய பாரம்பரியத்தை உள்வாங்கி, எழுதுவதே நிலைக்கும். இன்னும் நூறாண்டுகள் கழித்து எனது படைப்புகள் வாசிக்கப்படுமானால், அதுவே இலக்கியம். காலத்தை வென்ற எழுத்து.

கேள்வி 3 - படைப்பாளனை விட்டுவிடுங்கள்; படைப்பைப் பாருங்கள் என Death of the Author என்று சொல்லுகிறீர்களா?

ஆமாம்.

கேள்வி 4 - கட்சி அரசியலில் இருப்பது எழுத்தாளனாக உங்களுக்கு முரணாக இல்லையா?

இல்லை. நான் சிறுவயதிலேயே திமுகவிலிருந்தேன். திமுக மேடைகளில் பேசி இருக்கிறேன். மேடையில் சாதி வித்தியாசம் இல்லை. இருப்பினும் மேடையை விட்டு இறங்கிய பின்னர் இருக்கும். ஆனால் நீதிக்கட்சி தொடங்கி, திராவிட இயக்கம்தான் தமிழர்கள் எல்லோரும் படிக்க, எழுத வாய்ப்பளித்தது.

எனவே ஒரு விதத்தில் தற்கால எழுத்தாளர்கள் அனைவரும் திராவிட எழுத்தாளர்களே. எனது எழுத்தை எதற்காகவும் சமரசம் செய்து கொண்டது இல்லை. திமுகவைக் கடுமையாக விமர்சித்துள்ள எனது கட்சிக்காரன் சிறுகதையினைப் படித்துவிட்டு, தொலைப்பேசியில் அழைத்த கலைஞர் (கருணாநிதி) நன்றாக எழுதி இருக்கிறேன் என்று பாராட்டினார்.

கேள்வி 5 - ஐரோப்பிய, அமெரிக்கப் படைப்புலகில் உள்ளது போலச் சமகால முக்கிய நிகழ்வுகள் தமிழ் எழுத்தாளர்களால் இலக்கிய படுத்தப்படுவதில்லையே?

இது வருந்தத்தக்கது. அரசியல் நிலைப்பாடு எடுக்கத் தயக்கம் அல்லது அதை வெளிப்படுத்தும் துணிவு இல்லாததே காரணம். இது யாருக்குச் சாதகமாக இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும்.

இதையும் படிங்க:பாரதியாருக்கும், புதுச்சேரிக்கும் இடையேயான பந்தம் - கலைமாமணி பட்டாபிராமன் சிறப்பு நேர்காணல்

Last Updated : Dec 15, 2022, 6:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details