தொடங்கியது சட்டப்பேரவை...!
காலையில் 10 மணிக்கு சட்டப்பேரவை தொடங்கியது. இதில் பள்ளிக்கல்வித் துறை, மின்சாரத் துறை, ஊரக வளர்ச்சித்துறை, சட்டத்துறை, உயர்கல்வித் துறை, உணவு மற்றும் நுகர்வோர் வழங்கல் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, மக்கள் நல்வாழ்வு துறை, போக்குவரத்துத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்ந்த கேள்விகளுக்கு துறையின் அமைச்சர்கள் பதிலளிக்க உள்ளனர். அதனைத்தொடர்ந்து திருவாரூர் ஆழி தேரோடும் வீதிகளில் புதைவட மின் கம்பிகள் அமைப்பது குறித்து சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி கலைவாணன் கொண்டு வந்துள்ள அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு மின்சாரத்துறை அமைச்சர் பதிலளிக்கிறார்.
அதேபோல் கீழ்வேளூர் தொகுதியில் நிலக்கடலை சாகுபடி குறைந்து உள்ளதால் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டியது குறித்து சட்டப்பேரவை உறுப்பினர் மதிவாணன் அவசர கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளார். இந்த இரண்டு கவன ஈர்ப்பு தீர்மானங்களும் பேரவையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன. அதன்பின்னர் 2020-21ஆம் ஆண்டிற்கான முன்பண மானியக் கோரிக்கைகளை துணை முதலமைச்சரும் நிதித்துறை அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.
மேலும் இந்த மானியங்கள் மற்றும் சட்ட முன்மொழிவுகளை இன்றே நிறைவேற்ற வேண்டும் என தீர்மானம் முன்மொழியப் படுகிறது அதனை தொடர்ந்து சட்டப்பேரவை முடிவுகள் இன்று நிறைவேற்றப்பட்டு நிதி ஒதுக்கீடு அளிக்கப்படும் அதன்பின்னர் கைத்தறி மற்றும் துணிநூல் துறை, செய்தி மற்றும் விளம்பரத்துறை ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட உள்ளன. அதில் சட்டமன்ற உறுப்பினர்களின் விவாதத்திற்குப் பின்னர் மானியக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். மேலும் கரோனா வைரஸ் குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டு விவாதிக்கப்பட உள்ளது.