தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 10, 2022, 9:45 AM IST

Updated : Apr 10, 2022, 1:04 PM IST

ETV Bharat / state

Exclusive: அடுத்த மூன்று மாதத்தில் காங்கிரஸில் அதிரடி மாற்றம்... கிறிஸ்டோபர் திலக்...

காங்கிரஸ் கட்சியில் அடுத்த மூன்று மாதத்திற்குள் அதிரடி மாற்றங்கள் செய்யப்படும். பல்வேறு பதவிகளில் மாற்றங்கள் நடக்கும் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் கிறிஸ்டோபர் திலக், ஈடிவி பாரத் ஊடகத்திற்கு அளித்த பிரத்யேக நேர்காணலில் தெரிவித்தார்.

கிறிஸ்டோபர் திலக் பேட்டி
கிறிஸ்டோபர் திலக் பேட்டி

சென்னை: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் கிறிஸ்டோபர் திலக், ஈடிவி பாரத் தமிழ் ஊடக செய்தியாளர் யோக ஐயப்பனுக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அவர் கூறியிருப்பதாவது,

கேள்வி 1. காங்கிரஸ் தொடர் சரிவை சந்தித்து வருவதற்கான முக்கியக் காரணம் என்ன?

பதில்: காங்கிரஸ் 130 ஆண்டுகள் பழமையான கட்சி. பல்வேறு காலகட்டத்தில் பல முறை மறுமலர்ச்சி கண்ட கட்சி. இந்த காலத்தில் கட்சிக்குள் தலைமுறை மாற்றம் நடைபெறுகிறது. இதுவே சரிவுக்கு ஒரு முக்கிய காரணம். அதுமட்டுமில்லாமல் பாஜக சற்று வேறுபட்ட செயல்பாடுகளில் வலுவாக சென்று கொண்டிருக்கிறது. அதை ஒப்புக்கொள்ள வேண்டும்.

கேள்வி 2. நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப் பேரவை தேர்தலில் தோல்வியின் காரணமாக, அந்த மாநில தலைவர்களை காங்கிரஸ் கட்சி ராஜினாமா செய்ய வலியுறுத்தியது, இது பின்னடைவை ஏற்படுத்தாதா?

பதில்: ஒரு மாநில தேர்தலில் தோல்வி அடைந்தால், அம்மாநில தலைவர்களும், நிர்வாகிகளும் தங்களது பதவி ராஜினாமா கடிதத்தை கொடுப்பது வழக்கமானது. அவர்கள் பதவியில் நீடிக்க வேண்டுமா அல்லது வேறு பதவி கொடுக்கலாமா என்பதை கட்சித் தலைமை முடிவு செய்யும்.

ஒரு புதிய தலைமைக்கு புதிதாக ஒருவரையும், புதிய உத்தியையும் பயன்படுத்த வேண்டும் அப்பொழுதுதான் அந்த மாநிலத்தில் கட்சியை வலுப்படுத்த முடியும். இதைத்தவிர வேறு வழியில்லை.

கேள்வி 3:காங்கிரஸ் கட்சி குறிப்பிட்ட ஒரு சித்தாந்தத்தை பின்பற்றாததாலேயே தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது என்று பல்வேறு தரப்பினர் கூறுவதைப் பற்றி உங்கள் கருத்து?

பதில்:Hyper Capitalism, Hyper Hinduism, Hyper Nationalismஎன்பதுதான் பாஜகவின் சித்தாந்தமாக உள்ளது. முதலாளித்துவத்தை பாஜக கொண்டு உள்ளது. இதை எதிர்த்து கேள்வி கேட்டால் மத விரோதி எனக் கூறுகின்றனர். அதையும் எதிர்த்து கேள்வி கேட்டால் தேச துரோகி என்றுக்கூறி வாயை அடைத்து விடுவார்கள்.

ஆனால்,காங்கிரஸ் கட்சி அந்தந்த மாநிலத்திற்கு ஏற்றவாறு கொள்கைக் கொண்டுள்ளது. காங்கிரஸ் கொள்கை என்பது மிதவாதக் கொள்கை. பாஜக கொள்கை என்பது மதவாத கொள்கை. மிதவாதக் கொள்கை வைத்துக் கொண்டிருப்பதால் கொள்கையே இல்லை என்று சிலர் புரிந்து கொண்டுள்ளனர். அவர்களுக்கு விரைவில் தெரிய வரும்.

கிறிஸ்டோபர் திலக் பேட்டி

கேள்வி 4. காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சிப் பூசல் என்பது தொடர்ந்து இருக்கிறது, அதற்கான தீர்வு என்னவென்று நினைக்கிறீர்கள்?

பதில்: உட்கட்சி பூசல் என்பது அனைத்து கட்சிகளுக்குள்ளும் உள்ளது. மாநில கட்சிகளில் அந்தந்த மாநில தலைவர் தலையிட்டு தீர்த்து விடுவார். ஆனால் தேசிய கட்சியில் வேறு மாதிரியாக இருக்கும்.

டெல்லியில் இருந்து தலைமை தலையிட்டு ஒவ்வொரு மாநிலத்திலும் தீர்த்து வைக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து. எழுபது ஆண்டுகளாக ஜனநாயகம் மீது நம்பிக்கை குறையாமல் இருக்கிறது என்றால் அதற்கு அடித்தளம் காங்கிரஸ் கட்சிதான்.

கேள்வி 5. பாஜக எந்த ஒரு திட்டத்தை எடுத்தாலும், நேருவையும் காங்கிரஸ் கட்சியையும் குறை சொல்கிறது. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்: காங்கிரஸ் கட்சி ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தால், அந்தந்த காலத்திற்கு ஏற்றவாறே திட்டத்தின் செயல்பாடு இருக்கும். ஆனால் பாஜக பெட்ரோல் விலை ஏற்றத்திலோ, ஜிஎஸ்டி விதிப்பதிலோ அல்லது வேறு ஏதாவது ஒரு திட்டத்தை கொண்டு வருவதிலோ, தாங்கள் என்ன நினைக்கிறார்களோ அதுதான் நடக்கவேண்டும் என்று இருக்கின்றனர். நாங்கள் அப்படித்தான் செய்வோம் என்பதுபோல.
பாஜக நினைத்த திட்டத்தை செய்து வருகிறது. நேருவை குறை கூறுவதை குறித்து அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும். பாஜக ஒரே கொள்கை என்பதை கூறி வருகிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள், மொழி மாற்றங்கள் உள்ளன.

130 கோடி மக்கள் இருக்கும் இந்தியாவில் எப்படி ஒரே மாதிரியான கொள்கை இருக்க முடியும். பிற்படுத்தப்பட்டோர் தலித் சமூக மக்கள் படித்து முன்னேறுகிறார்கள் என்றால் அதற்கு முக்கிய காரணம் நேருவும் அம்பேத்கரும்தான்.

கேள்வி 6. தமிழ்நாட்டில் ஏன் இன்னும் கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது?

பதில்:இதற்கு முக்கியமான காரணம் ஹிந்துத்துவா சக்திகளை அழிக்கவே. அதனால்தான் திமுக கூட்டணியில் இருக்கிறது. இந்த கூட்டணியில் காங்கிரஸ் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

கேள்வி 7.காங்கிரஸில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எவ்வாறு இருக்கும்?

பதில்:அடுத்து இரண்டு மூன்று மாதங்களில் அதிரடியான நடவடிக்கைகள் இருக்கும். பல்வேறு பதவிகளில் மாற்றங்கள் நடக்கும். வரும் செப்டம்பர் மாதத்திற்குள் அதிரடி மாற்றங்களை பார்க்கலாம் என்றார்.

இதையும் படிங்க: தெலங்கானா மாநிலத்தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ்... தலைவர்களுடன் ராகுல் காந்தி சந்திப்பு

Last Updated : Apr 10, 2022, 1:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details